இறைவனைப் பாடிப் பெற்ற பரிசில் - – அறநெறிச்சாரம் 220

பஃறொடை வெண்பா

முனைப்பாடி யானைச்சூர் முக்குடைச் செல்வன்
றனைப்பாடி வந்தேற்குத் தந்த பரிசில்
வினைப்பாடு கட்டழித்து வீட்டின்ப நல்கி
நினைப்பாடி வந்தோர்க்கு நீமீக வென்றான்*
நிறைவிளக் குப்போ லிருந்து 220

– அறநெறிச்சாரம்

*வந்தோற்கு......நீமீ கென்றான்

பொருளுரை:

திருமுனைப் பாடியின்கண் எழுந்தருளியிருப்பவனும் தெய்வத்தன்மை வாய்ந்த மூன்று குடைகளுடைய செல்வனுமாகிய அருகனை பாடியடைந்த எனக்கு அவன் அருளிய பரிசிலாவது மிக்க வினைத் தொடர்பை அழித்து முத்தியின்பத்தை யருளினதேயன்றி நந்தாவிளக்கே போன்று விளங்கி உன்னைப் பாடியடைந்தவர்கட்கும் அறிவினை நல்குவாயாக என்று கூறியருளியதுமாகும்.

நீம் ஈக என்றான் - அறிவினை நல்குவாயாக என்று கூறியருளியதுமாகும்.

குறிப்பு: சூர் - தெய்வம். நீம்: நீமம் என்பதன் இடைக்குறை; நீமம் – ஒளி; நினைப்பாடி - நினைத்து எனலுமாம்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jan-23, 10:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

சிறந்த கட்டுரைகள்

மேலே