தாய்க்குப்பின் தான் தாரம்

அப்போது என் வயது சுமார் பதிமூன்று. அந்தப் பின் மத்திய வேளையில் வீட்டில் என்னைச் சுற்றி யாரும் இல்லை. சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் என் வீட்டில் சாய்ந்து கொள்ளும் நாற்காலி ஒன்றில் நான் சாய்ந்த வண்ணம் இருந்தேன். அந்த நேரம் மதியமும் இல்லை மாலையும் இல்லை. வெயிலும் அதிகம் இல்லை. என் கண்களை மூடிய வண்ணம் இருந்தேன்.
"ஆஹா, எவ்வளவு ஆனந்தமாக உள்ளது. எங்களது சொந்த வீடு. இத்தனை வருடங்கள் இந்த வீட்டில் காலத்தை ஒட்டிவிட்டேன். இனி வரும் காலங்களிலும் இந்த வீட்டில்தான் இருப்பேன். ஏன், நான் இதே சாய்வு நாற்காலியில் இந்த இடத்திலேதான் இறப்பேன். எனக்கு உலகில் வேறு எதுவும் தேவை இல்லை. பணம் வேண்டாம் ஆனால் அம்மாவின் பாசம் போதும். என் அண்ணன் தம்பி அக்கா தங்கை எவரும் எனக்குத் தேவை இல்லை. அவர்கள் அனைவரும் அவரவர்கள் வழியில் செல்லட்டும். எனக்கு இந்த வீடும் என் தாயும் தான் வாழ்வின் பிரதானம்."

அந்த நேரத்தில் என் அன்புத்தாய் "ரமேஷ், இந்தா சூடாக காஃபி குடி" என்று கொடுத்தாள். வீட்டில் நாங்கள் பதினொன்று பேர், என் அப்பா அம்மாவைச் சேர்த்து. இந்தக் கும்பலிலும் என் தாய் என்னைத் தனிப்பிரியமுடன் கவனித்துக்கொண்டாள் என்றே என் மனத்துக்குத்தோன்றியது.

நான் இரண்டு வயது இருந்தபோது ஒருமுறை கெரோசின் ஸ்டவ் பக்கத்தில் காக்கடா (கெரோசின் ஸ்டவ்வை பற்றவைக்கும் கைமானி) வைத்திருந்த டம்பளரில் இருந்த கெரோசின் வண்டலைக் கொஞ்சம் வாயில் ஊற்றிக்கொண்டுவிட்டேனாம். என் உடல் எல்லாம் நீலம் பூத்து என் கண்கள் பிதுங்கிவிட்டனவாம். இதைக்கண்டு என் தாய் பதறி அடித்துக்கொண்டு என் பெரிய அண்ணனுடன் மருத்துவரிடம் என்னைத்தூக்கிச்சென்றாராம். அந்த மருத்துவர் "நான் சொல்வதைக்கேட்டு அழாதீர்கள். உங்க பையன் உடல் நீலமாகிக்கொண்டு போகிறது. உடனேயே அவசர சிகிச்சைக்கு அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லுங்கள்" என்று சொன்னவுடன் என் தாய் அங்கிருந்து என்னை அரசு பொது மருத்துவமனைக்கு கூட்டிசென்றாராம். அங்கே ஒரு பிளாஸ்டிக் குழாயை என் வாயினுள்ளே செலுத்தி என் உள்ளிருந்த கொஞ்ச கெரோசின் கசிண்டுகளை வெளியே எடுத்தார்களாம். என் உடல் நிறம் மீண்டும் பழையநிலைக்கு வந்தபின்னால் தான் என் அம்மாவுக்கு உயிரே வந்ததாம். இதைகேட்கும்போது நான் அவ்வப்போது சிரிப்பேன், அவ்வப்போது என் தாய் அந்த நேரத்தில் என்னைக்காப்பாற்ற பட்ட அவதிகளை நினைத்துக்கலங்குவேன்.

இன்னொருமுறை நான் தீபாவளி நேரத்தில், ஒரு நாள் இரவு, வீட்டில் எல்லோரும் தூங்கியபின், என் அம்மா செய்து வைத்த இனிப்புகளை எடுக்க சமயலறையில் உள்ள அலமாரியின் மீது, ரகசியமாக ஏறுகையில் கீழே விழுந்து என் தலையிலும் கையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. எனக்கே இந்த சம்பவம் நினைவில் இருக்கிறது. அப்போது நல்லவேளையாக எங்களது பக்கத்துக்கு வீட்டில் வசித்து நல்ல மனிதர் ஒருவர் அவரது ஸ்கூட்டரில் என்னையும் என் அம்மாவையும் ஏற்றிக்கொண்டு எங்கள் குடும்ப மருத்துவரிடம் காட்டி, அந்த மருத்துவர் எனக்கு தலையிலும் கையிலும் கட்டுகள் போட்டு, ஒரு இன்ஜெக்ஷனும் கொடுத்து மருந்து மாத்திரைகளும் கொடுத்தார். ஒரு அம்மா என்றால் எந்த அளவுக்கு அவள் குழந்தைமீது அன்பு செலுத்துகிறாள், எப்படி அந்தக்குழந்தையைத் தாங்குகிறார் என்பதற்கு மேற்கூறிய இரண்டு நிகழ்ச்சிகளும் சிறந்த உதாரணங்கள்.

அடுத்த ஆறு வருடங்களில் என் தந்தை காலம் அடைந்தார். வீட்டில் ஏகப்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகள். பெரிய அண்ணன் திருமணமாகித் தனிக்குடும்பம் செய்துவந்தான். அடுத்த பெரிய அண்ணனும் திருமணமாகி மனைவியுடன் வெளியூரில் வசித்து வந்தான். பெரியவனிடமிருந்து ஒரு தம்பிடி பைசாவும் கிடைக்கவில்லை. அடுத்தவன் அவ்வப்போது ஏதோ பணம் கொடுத்துவந்தான். மூன்றாவது அண்ணன் நிலையாக ஒரு உத்தியோகத்தில் நிலைக்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், என் இரண்டு சகோதரிகளையும் மற்றவர்களையும் என் அம்மா எப்படிக் காப்பாற்றினாள் என்பது என் அன்புத்தாய்க்கு மட்டுமே தெரியும்.

நான் என் இருபதாவது வயதில் ஒரு சிறிய மாதாந்திர தொகைக்கு ஒரு தொழிற்சாலையில் பணிக்குச் சேர்ந்தேன். மாதாமாதம் எனக்குக் கிடைத்த முன்னூறு ரூபாய் சம்பளத்தை என் அம்மாவிடம் கொடுத்து அவளை விழுந்து கும்பிட்டுவிட்டு பின்னர் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டுதான் மற்ற வேலைகளை கவனிப்பேன். இரண்டு வருடங்களுக்குப்பிறகு நான் பணிபுரிந்து வந்த தொழிற்சாலையில் நிரந்தரமாக்கப்பட்டேன். அதனால் என் மாத சம்பளமும் கூடியது. இதனால் என்னைவிட இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தது என் தாய்தான். மற்ற அண்ணன்கள் இருவருக்கும் வேலைகிடைத்து ஓரளவுக்கு அவர்களும் சம்பாத்தியம் செய்யத்துவங்கினர்.

எனக்கு எங்கள் தொழிற்சாலை கான்டீன் சாப்பாடு அவ்வளவு பிடிக்கவில்லை என்பதால், அந்தத் தொழிற்சாலையில் இரண்டு வருடங்கள் பணிபுரிந்த பின்பு, என் தாய் தினமும் எனக்காகச் சமைத்து எங்கள் தொழிற்சாலைக்கு சைக்கிளில் சாப்பாடு கொண்டுதரும் ஒருவர் மூலம் எனக்கு அனுப்பிவைப்பாள். வீட்டில் அவளுக்கிருந்த அவ்வளவு வேலைகளையும் பார்த்துக்கொண்டு எனக்காகச் சமையல் செய்து டப்பாவில் அனுப்பியது என்மீது என் தாய்க்கிருந்த பாசத்தைப் பரிமளித்தது.

ஆனால் என் பொற்காலம் அடுத்த இரண்டு வருடங்களில் முடிவுக்கு வந்துவிட்டது. ஆம், என்னுடைய தொழிற்சாலை இழுத்துமூடப்பட்டுவிட்டது. அந்த ஆண்டவனுக்கும் நான் சந்தோஷமாகச் சென்னையில் என் தாயுடன் இருந்தது பிடிக்கவில்லைபோலும், வேலையின்றி அவதிப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு, வடஇந்தியாவில் 1500 கிமீ தூரத்தில் ஹரித்துவார் என்ற இடத்தில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் உத்தியோகம் கிடைத்தது. என் அன்புத்தாயையும் மற்றும் என் உறவுகள் மற்றும் சில சிறந்த நண்பர்களைவிட்டுப் பிரிந்த அந்த நாள் இன்றும் என் நினைவில் இருக்கிறது. நான் கண்ணீர் விட்டதை என் தாய் அறிந்திருக்கமாட்டாள், நானும் என் தாய் கண்ணீர் விட்டதைப்பார்க்கவில்லை. என் கண்முன் அழுதால் நான் நொந்துவிடுவேன் என்பதால் அவள் தனிமையில் எப்படித் தேம்பித்தேம்பி அழுத்திருப்பாள் என்பதை என்னால் அப்போதே கற்பனை செய்துபார்க்கமுடிந்தது.
அதன் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து, என்னுடைய ஒரு பெரிய அண்ணனின் திருமணம் நடந்தது. ஆனால், எனக்குவாய்த்த அண்ணி என் தாய்க்கு ஒத்துவரவில்லை, ஏன் என் அண்ணனுக்கும்தான். என் தாய் எதை வேண்டுமானாலும் பொறுத்துக்கொள்வாள் ஆனால் சாப்பாடு விஷயத்தில் மட்டும் கஞ்சத்தனம் அவளுக்கு பிடிக்காதது. இந்த விஷயத்தில் என் அம்மா என் தந்தையைத்தான் குறிப்பிடுவாள். என் தந்தை மிகவும் கோபக்காரர். வீட்டில் எல்லோரையும் பொரிந்துத் தள்ளுவார். அவருக்கு கையும் நீளம். என் தாயை எங்கள் கண் எதிரிலேயே பளார் பளார் என்று அவர் பலமுறை அறைந்ததை என்னால் மறக்கமுடியாது. இந்த ஒரு காரணத்தினால் என் தந்தையை எனக்குக்கொஞ்சமும் பிடிக்காது. ஆனால் உணவு விஷயத்தில் மட்டும் அவர் மிகவும் சிறந்தவர். எங்கள் அனைவருக்கும் மூன்று வேளையும் வயிறு நிறைய சாப்பிட அவர்தான் காரணமாக இருந்தார்.

என் அண்ணி சாப்பாடு விஷயத்தில் என் தாயைச் சரியாக கவனிக்கவில்லை. என் அண்ணன் பிறருடன் மிகவும் பிணைந்து போகின்றவன். எனவே அவன் என் அண்ணியிடம் ஒரு குறையும் சொல்லாமல் வாழப்பழகிக்கொண்டுவிட்டான். அவன் திருநெல்வேலியில் பணிபுரிந்து வந்தான். சென்னையிலிருந்த என் தாயை என் அண்ணன் அவ்வப்போது அவனுடன் வந்து இருக்கச்சொல்வான். என் தாயும் சென்றாள். ஆயினும் தொடர்ந்து ஒரு வாரத்திற்குமேல் அவள் அவர்களுடன் தயங்கியதில்லை. நானும் என் தாய்போலதான், வசதி உள்ள எவரேனும் சரியாக உபசரிக்கவில்லை என்றால் நான் அவர்களிடம் பழகமாட்டேன், அப்படிப்பட்டவர்கள் வீட்டிற்கும் முடிந்தவரைச் செல்லமாட்டேன். தனது பிள்ளை என்ற ஒரே காரணத்திற்காக என் தாய் வருடத்தில் ஓரிருமுறை என் அண்ணன் வீட்டிற்குச் சென்றுத் தங்கிவருவாள்.
நான் ஹரித்துவாரில் இருந்தபோது என் தாய் என்னுடன் பத்து நாட்கள் தங்கிச்சென்றாள். பணியின் அழைப்பில் நான் ஐந்து ஊர்களில் தங்கிப் பணிபுரிந்தேன். ஹரித்துவார், ஸ்ரீசைலம், பாண்ஸ்வாடா, ஜான்சி, ஹைதராபாத் இந்த ஊர்களுக்கு என் தாய் வந்து எனக்கு சமையல் செய்து கொடுத்தாள். மிகவும் விரைவாகச் சமையல் செய்துவிடுவாள், தாயின் சமையலும் அவ்வளவு சுவையாக இருக்கும். என்னுடன் தங்கியபோதெல்லாம், எனக்கு இனிப்புகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதனால் அவ்வப்போது எதாவது இனிப்பு பலகாரம் செய்துதருவாள்.
இருப்பினும் சென்னையில் பயந்த சுபாவம் கொண்ட என் தம்பி இருந்ததால் மற்றும் சொந்த வீட்டைப் பராமரிக்க வேண்டியிருந்ததால், இரண்டு வாரம் அல்லது அதிகமாக ஒரு மாதம் இருந்துவிட்டு என் தாய் மீண்டும் சென்னை திரும்புவாள். என் தாய் என்னிடம் காட்டியத் உயர்ந்த பாசத்திற்கும் அன்பிற்கும் இதுவே சிறந்த அடையாளங்கள்.
என் திருமணத்திற்குப்பின் என் தாய் என் மனைவியிடம் மிகவும் அன்பாகப்பழகினாள். அதைப்போலவே என் மனைவியும் என் தாயிடத்தில் மிகவும் கனிவுடன் அன்புடன் பழகினாள். இது எனது கொடுப்பினை என்றுதான் சொல்வேன். என் தம்பி சரியான உத்தியோகமின்றி வாழ்ந்துவந்தான். இதனால் அவன் திருமணமும் செய்துகொள்ளவில்லை. இந்த விஷயத்தில் என் தாய் மிகவும் மனம் ஒடிந்து போனாள். நம் மற்ற பிள்ளைகள் எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது ஆனால் கடைக்குட்டிக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஆதங்கம் என் தாயின் மனதில் மிகவும் இருந்தது. மேற்கூறிய காரணங்களினால் என் தாய் என் தம்பியுடனேயே மீதமிருந்த தனது வாழ்நாளைக்கழித்தாள். என் அக்கா தங்கை குடும்பங்கள் சென்னையிலேயே இருந்தது என் தாய்க்குக் கொஞ்சம் ஆறுதல் தந்தது.

நான் இரண்டு மூன்று முறை சென்னையில் சென்று என் தாயுடன் வாழ விருப்பப்பட்டு, சில நிர்வாகங்களில் நேர்முகத்தேர்வுக்குச் சென்று வந்தேன். ஆனால் எனது துர்பாக்கியம் எனக்கு அந்த நிர்வாகங்கள் எதிலும் வேலை கிடைக்கவில்லை. இதனால் தாயிடமிருந்து பிரிந்து வாழும் துரதிருஷ்டவசமான மகனானேன்.
நான் ஹைதராபாதில் இருந்தபோது என் தாய்க்கு கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலக்கோளாறுகள் வரத்தொடங்கியது. நான் திருப்பதி அருகே உள்ள ஒரு ஊரில் என் நிர்வாகத்தின் பணிக்காகச் சென்று தங்கியிருந்தபோதுதான் என் தாய் சென்னையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறாள் என்ற செய்து கேட்டவுடன் நான் விரைந்தேன். சென்ற நாள் அன்று அவளைப்பார்த்து பத்து நிமிடங்கள் பேசினேன். அடுத்த நாள் காலை ஒரு முறை அவளைக்கண்டு வந்தேன். அவளது முகம் உடல் உள்ளம் எல்லாமே வாடியிருந்தது. எனக்கு சொல்லமுடியாத கவலை. அன்று மாலையில் எனது சில உறவினர்கள் வந்து என் தாயைப் பார்த்துவிட்டுச் சென்றனர். நானும் ஒருமுறை அப்போது என் அன்புத்தாயை காண விழைந்தபோது, அவள் உடல் நிலைகாரணமாக எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. அன்று காலை நான் அவளைக்கண்டதே என் தெய்வத்தாய் எனக்கு அளித்த இறுதி தரிசனமாக அமைந்தது.
அடுத்தநாள் விடிகாலை ஐந்து மணி அளவில் எண்பது வயது நிறைந்த என் ஒப்பற்ற ஆருயிர்த்தாய் என்னையும் இந்த உலகை விட்டும் பிரிந்து, இறைவனடி சேர கண்ணுக்குத்தெரியாமல் பறந்துவிட்டாள். என்னை அவ்வளவு நேசித்த, என்னிடம் அன்பையும் பாசத்தையும் வெள்ளம்போல் பொழிந்த அந்த மகாத்மா இப்போது எங்கிருக்குமோ, நான் அறியேன். அவள் மீண்டும் பிறப்பெடுத்தாலும் நல்லபிறவியாகத்தான் எடுத்திருப்பாள். எனக்கு இன்னொரு மனிதப்பிறவி இருப்பின் நான் மீண்டும் அந்த அருமையானத் தாய்க்கு மகனாகப் பிறக்கவேண்டும்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (23-Jan-23, 9:14 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 65

சிறந்த கட்டுரைகள்

மேலே