573 ஆண்டவன் வேண்டும் அறம்புரிந்து வாழ்க - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 31

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

நரனருள் புரிந்தோ ரன்னோன்
..மனோரத நாடிச் செல்வர்
பரனருள் பெறவ வன்சொன்
..மறைவழி பற்றி யன்னான்
திரமுறப் பகைக்கும் பாவச்
..சிக்கறுத் தவன்வி ரும்புந்
தரமறு தருமந் தன்னைச்
..சார்ந்திடர் தீர்ந்துய் நெஞ்சே. 31

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

மனமே! மக்கள் செல்வம் கல்வி முதன்மை (அதிகாரம்) முதலியவற்றால் சிறந்திருப்போரை அடைந்து அவரருளைப் பெற விரும்புவோர் அவர்தம் குறிப்பறிந்து ஏவல் செய்து வாழ்வர்.

அதுபோல், முழுமுதற் செம்பொருளின் திருவருளைப் பெற விரும்புவோர் அவர் அடியார் வாயிலாக அருளிய உலகியல் ஒழுக்க நூலாகிய மறையினைக் கைக்கொண்டு அறம்பல புரிந்து நல்வழியில் ஒழுகவேண்டும்.

அவர் மிகுதியும் வெறுக்கும் ஐம்பெரும் தீமையைக் கனவிலும் நண்ணவொட்டாது, நினைத்தல், கேட்டல், சொல்லல், காண்டல், கலத்தல் முதலியவற்றில் நல்லனவே பயின்று விலக்குதல் வேண்டும்.

ஒப்பில்லாத செப்பரும் சிறந்த புண்ணியங்களை இடையறாது செய்து பிறவிப் பெருங்கடல் நீந்திப் பேரின்பப் பெருவாழ்வு எய்திப் பேரா இயற்கைத் தாய் வாழ்வாயாக.

நரன் - மக்கள். மனோரதம் - குறிப்பு; விருப்பம். மறை - ஒழுக்க நூல் (திருக்குறள்). திரம் - மிகுதி.
சிக்கு - பிணக்கு. தரமறு - ஒப்பில்லாத.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jan-23, 5:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே