327 செருக்கு வருங்கால் செல்வம் அழியும் - செல்வச் செருக்கு 6
கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
நாசமாங் காலமே நண்ணு முன்னிறகு
ஈசலுக் கெய்தலும் இரியு முன்னமே
தேசது மிகுத்தொளிர் தீபம் போலவும்
நீசர்தஞ் செருக்கினா னிதியி ழப்பரே. 6
- செல்வச் செருக்கு, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”ஈசலுக்கு அழிவுகாலம் வருவதற்கு முன் இறகு முளைக்கும். விளக்கு அணையப் போகும் பொழுது அதிக ஒளியுடன் கொழுந்துவிட்டு எரியும்.
இவை போல, தீச்செயல் புரியும் கீழோர் அவர்தம் செருக்கினால் அவர்களது செல்வத்தை இழப்பார்கள்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
நாசம் - அழிவு. நண்ணும் – வளரும், இரியும் - கெடும். தேசசு – அதிக ஒளி, நீசர் - கீழோர்.