574 சிற்றுயிர்க் கன்பிலார் செம்பொருட்கும் அன்பிலார் - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 32

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

கண்டமன் னுயிரைப் பேணான்
..காணொணாப் பரன்பா னேசங்
கொண்டன னெனல்பொய் யாஞ்செங்
..கோல்வழி நிலார்கோன் சேயர்க்(கு)
அண்டலர்க் கோனுக் கன்பர்
..ஆவரோ நற்கு ணங்கள்
விண்டவர் பிறர்க்கன் பில்லார்
..விமலர்க்கு மன்பி லாரால். 32

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

மன்னவனின் மக்களுக்கு வேண்டும் நலம்புரிந்து உதவாது, அம்மன்னவனுக்கு வேண்டுவ புரிவாரை மன்னவன் அன்புடன் விரும்புவனோ? விரும்பான்.

அதுபோல், அனைத்துயிர்க்கும் அம்மையாய் அப்பனாய்த் திகழும் ஆண்டவனும் காணப்படும் ஓரறிவுமுதல் ஆறு அறிவு ஈறாகவுள்ள எல்லா வுயிர்கட்கும் முக்காலத்தும் மூவிடத்தும் முப்பொறியானும் செய்யத் தகுவனவற்றைக் காதலொடும் ஓவாது செய்யாமல் காணாத தன்னைமட்டும் இடையிடையே வணங்குவதுபோல் நடிக்கும் நற்குணமில்லாத வாய்மையில் புல்லரை ஒருநாளும் விரும்பான்.

அனைத்துயிர்க்கும் அன்பிலான் ஆண்டவனுக்கும் அன்பிலான் என்பது மறுக்கப்படாத மெய்ம்மையாம்.

சேயர் - மக்கள். அண்டலர் - நெருங்காதவர்; பகைவர். விண்டவர் - விட்டவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jan-23, 5:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 4

சிறந்த கட்டுரைகள்

மேலே