74 தாய் தந்தைக்கு ஈடெங்கும் இல்லை - தாய் தந்தையரை வணங்கல் 1
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் காய்ச்சீர் வரலாம்)
சின்னவோர் பொருள்தந் தோரைச்
..சீவனுள் ளளவு முள்ளத்(து)
உன்னவே வேண்டு மென்ன
..உரைத்தனர் பெரியோர் தேகந்
தன்னையா ருயிரைச் சீரார்
..தரணியின் வாழ்வைத் தந்த
அன்னைதந் தைக்குச் செய்யும்
..அருங்கைம்மா றுளதோ அம்மா! 1
- தாய் தந்தையரை வணங்கல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”சிறிய பொருள் தந்தவரையும் வாழ்நாள் உள்ளளவும் மனத்தில் நினைக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்கின்றனர்.
அப்படியானால் நம் உடலினையும், அரிய உயிரையும் சிறப்பு மிகுந்த இவ்வுலக வாழ்வையும் தந்த தாய் தந்தையர்க்கு செய்யும் சிறந்த பதில் உதவி உண்டோ அம்மா!” என்று தாய் தந்தைக்கு இவ்வுலகில் ஈடு எங்கும் இல்லை என் இப்பாடலாசிரியர் தெரிவிக்கிறார்.