75 ஈன்று புறந்தந்த தாயினை வணங்கு - தாய் தந்தையரை வணங்கல் 2
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் காய்ச்சீர் வரலாம்)
கடவுளை வருந்திச் சூலாய்க்
..கைப்புறை யுண்ட னந்தம்
இடர்களுற் றுதரம் தன்னில்
..ஈரைந்து திங்கள் தாங்கிப்
புடவியில் ஈன்று பன்னாள்
..பொற்றனப் பாலை யூட்டித்
திடமுற வளர்த்து விட்ட
..செல்வியை வணங்காய் நெஞ்சே. 2
- தாய் தந்தையரை வணங்கல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”கடவுளைத் தொழுது கருவுற்று, கசக்கும் மருந்து உண்டு, பல துன்பங்கள் அடைந்து தன் வயிற்றில் பத்து மாதங்கள் சுமந்து இப்பூமியில் பெற்றெடுத்துப் பலநாட்கள், பொன் போன்ற முலைப் பாலூட்டி வலிமையுடன் வளர்த்த அருமைத் தாயை வணங்குவாய் நெஞ்சமே” என்று இவ்வுலகத்தில் பெற்று வளர்த்த தாயினைப் போற்ற வேண்டும் என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.
சூல் - கரு. கைப்பு – கசப்பு, உறை - மருந்து.
உதரம் – வயிறு, அனந்தம் - பல.
புடவி – பூமி, உலகம். செல்வி - அருந்தாய்.
பொற்றனம் (பொன் + தனம்) – பொன் போன்ற முலை,