192 எல்லா நலமும் இயைந்தவர் ஏவலர் - தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கு அடங்கல் 5
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
அறநெறி யலாத செய்கை
..ஆண்டகை சொல்லிற் கேளார்
புறமுற வவன்குற் றத்தைப்
..புகன்றிடார் பொய்க ரத்தன்
மறமிலா ரவனை யன்னை
..தந்தைபோன் மதிக்கும் நீரார்
இறவிலாக் கடவுள் வாழும்
..இதயத்தார் சேட ரம்மா. 5
- தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கு அடங்கல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நற்செயல் அல்லாத செயல்களைத் தலைவர் கூறினால், அதனைக் கேளார். தலைவர் குற்றத்தை வேறோர்க்குத் தெரியும்படி யாரிடமும் சொல்ல மாட்டார். பொய், மறைப்பு, முதலிய தீமையில்லாத குணமுடையவர். தலைவரைத் தாய் தந்தை போல் மதிக்கும் தன்மையர். என்றும் அழியா இறைவன் வாழும் நெஞ்சமுடையவர் நல்ல வேலையாட்கள் ஆவர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
ஆண்டகை - தலைவன். கரப்பு - மறைப்பு.
சேடர் - வேலையாள்.