255 வழக்காடும் இருவரிடமும் கைக்கூலி பெறுவது முழுக்கொள்ளை – கைக்கூலி 11
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
இருவ ரிடத்தும் விவாதநிதிக்(கு)
..இரட்டி கொள்வர் தகாதென்னின்
அருமை சயமென் பார்தோல்வி
..அடைந்தோன் தந்த நிதிகேட்பின்
வெருவ வவன்மேற் பொய்வழக்கை
..மெய்போற் கற்பித் திடரிழைத்துச்
சருவ கொள்ளை யடிப்ப‘ர்’பரி
..தானம் வாங்கும் பாதகரே. 11
- கைக்கூலி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”கைக்கூலி வாங்கிப் பாதகம் செய்பவன் வழக்காடும் இருவரிடமும் வழக்கின் தொகைக்கு இரண்டு பங்கு பெற்றுக் கொள்வான். யாரேனும் கொடுக்க மறுத்தால் வெற்றி பெறுவது மிகச் சிரமம் என்பான்.
வழக்கில் தோற்றவன் தான் கொடுத்த கைக்கூலிப் பொருளைத் திருப்பிக் கேட்டால், கோபித்து அவன் மேல் பொய் வழக்கு ஏற்படுத்தி, உண்மை போலத் தோன்றும்படி செய்து துன்புறுத்தி, முழுக்கொள்ளையடிப்பான்” என்று கைக்கூலி பெறுபவனின் பாதகம் செய்யும் தன்மையை இப்பாடலாசிரியர் தெளிவு படுத்துகிறார்.
சருவகொள்ளை - முழுக்கொள்ளை, பரிதானம் - கைக்கூலி