136 அன்பர் பொருட்காக அகலுதலால், அக்காள் என்பது தகும் - கணவன் மனைவியர் இயல்பு 28
தரவு கொச்சகக் கலிப்பா
திருவென்ன வெனைநினையார் சீர்கேடி யெனநினைந்து
பொருள்வயினே கிடச்சீவன் போல்வாரே யுன்னுதலால்
ஒருதரமோ பலதரநீ ஓஅக்காள் அக்காளென்(று)
இருவினையேன் றனையழைத்த விழுக்கன்று பைங்கிளியே. 28
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”பசுங்கிளியே! உயிர் போன்ற காதலரே என்னைத் திருமகளாகிய பொருள் அள்ளித் தருபவள் என்று நினைக்காமல், அவளுக்கு மூத்தவளாகிய மூதேவி என்று நினைத்துப் பொருள் தேடச் செல்ல நினைக்கின்றார்.
அதனால் கொடிய துன்பமுற்ற என்னை நீ அக்காள்.. அக்காள்.. என்று ஒரு முறையல்ல, பலமுறை அழைத்தாலும் குற்றம் ஒன்றும் இல்லை” என்று கிளியிடம் தலைவி தன் ஆற்றாமையை வெளிப்படுத்துவதாக இப்பாடலாசிரியர் கூறுகிறார்.
திரு – திருமகள், பொருளருளும் தெய்வம். சீர்கேடி - மூதேவி. உன்னுதல் - நினைத்தல், அக்காள் - மூதேவி, இருவினை – கொடுவினை, கொடிய துன்பம்.