256 கைக்கூலியால் முறைசெயல் களவுப்பொருள் விலையொக்கும் – கைக்கூலி 12

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

பொய்வா தியர்பாற் பொருள்கொண்டு
..வாழ்க்கைப் புரட்டல் அநீதிபொருள்
மெய்வா தியர்பாற் கொண்டவர்க்கு
..விவாதந் தீர்க்கும் நிலைஎற்றேல்
உய்வார் பொருளைக் கவர்ந்ததற்கு
..விலைகொண்(டு) உவர்க்குஉஃ(து) இடல்போலும்
பெய்வான் மழைக்கு வரிவாங்கிப்
..பிழைக்கும் கொடுங்கோன் போலுமால். 12

- கைக்கூலி
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”பொய் வழக்கு தொடுத்து வாதம் செய்வாரிடம் கைக்கூலி பெற்று வழக்கை நடத்துவது முறைகேடு ஆகும்.

உண்மைக்காக வழக்கு தொடுப்பவர்களிடமும் கைக்கூலி பெற்று அவ் வழக்கை முடிப்பது எப்படியென்றால், ஒருவனுக்கு உரிமையான பொருளைக் கவர்ந்து அப் பொருளுக்கு அவனிடமே விலையும் வாங்கிக் கொண்டு கொடுப்பதையும், கைம்மாறு கருதாது பெய்யும் மழைக்கு வரிவாங்கிப் பிழைக்கும் கொடுங்கோல் மன்னன் செயலையும் போன்றதாகும்” என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.

வாதியார் - வழக்காடுபவர். அநீதி - முறைகேடு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jan-23, 9:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

சிறந்த கட்டுரைகள்

மேலே