369 நேரில் புகழ்வது நினைக்கில் வைதலாம் – தற்புகழ் 2
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)
ஒருவன்கா ணாவிடத்து உவனை மெச்சலே
தருமமாம் முகத்துதி சாற்றல் வைதலாம்
பெருமுறை யீதெனில் பிறர்முன் தன்னைத்தான்
பொருளென மெச்சல்போற் புன்மை வேறுண்டோ. 2
– தற்புகழ்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”ஒருவனை இல்லாத போது அவனைப் புகழ்ந்து பேசுவது அறமுறை ஆகும். நேரில் அவனைப் புகழ்வது திட்டுவது போலாகும்.
இதுதான் முறையாக இருக்க, மற்றவர் முன் தன்னைத்தானே ஒரு பொருட்டாக புகழ்ந்து கொள்வதைப் போல இழிவு உண்டா?” என்று இப்பாடலாசிரியர் கேட்கிறார்.
முகத்துதி - புகழ். புன்மை - இழிவு,