395 துன்பந் துடைப்போர் கலைதேர் தூயோராவர் - கைம்மாறு கருதா உதவி 13
எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(புளிமா கருவிளம் புளிமா கருவிளம் / புளிமா கருவிளம் புளிமாங்காய்)
கலைதேர் கழகமோ டனநீர் தருமனை
..கயமா மதகுகள் வழிசாலை
நிலையா லயநலி யினர்வா ழிடமுதல்
..நிருமா ணமதுற நெறிமேவி
உலைவால் வருபவர் துயரே கெடவவர்
..உளமா னதுமகிழ் வொடுதேறக்
கலையூ ணகமுத லினிதீ குவர்வளர்
..கலையோர் நிலையுறு தலையோரே. 13
- கைம்மாறு கருதா உதவி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”கலைகளைத் தேர்ந்து சொல்லித்தரும் பள்ளிக்கூடம், சோறு தண்ணீர் அளவின்றி வழங்கும் வீடு, குளம் முதலிய நீர்நிலைகளுள்ள பெரிய மடைகள், நடைவழிப் பெருஞ் சாலைகள், அழிவில்லாத நிலையான முதல்வன் திருக்கோவில், துன்புற்றார் தங்குமிடம் முதலிய வற்றை ஏற்படுத்தி, அவற்றில் துன்பமுடன் வருபவர்களுடைய துன்பம் கெட அவர் உள்ளம் மகிழ்ந்து தெளிவு எய்த, உண்மை நூலைத் தெளிந்து அவ்வழி நடக்கும் சிறந்தோர் கல்வி, உணவு, உறையுள் முதலியன இனிமையுடன் கொடுப்பர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
கயம் - குளம். நலியினர் - துன்புறுவோர்.
மதகு - நீர் போதற்கும் வருதற்கும் வாய்ந்த மடை. நிருமாணம் - ஏற்பாடு; அமைப்பு.
தலையோர் - சிறந்தோர்.