396 ஆண்டவன் அருள் பொருள் அனைவர்க்கும் பொதுவே - கைம்மாறு கருதா உதவி 14
கலித்துறை
எல்லோருங் கொளவே பரமன் எண்ணில் பொருளீந்தான்
சில்லோர் யாவு(ம்)வவ்வி ஒளிக்குபு தீமைகள் செய்தலினால்
பல்லோ ரில்லோராய்ப் பசிப்பிணி பாய்ந்துள நைவார்கள்
சொல்லோர் நல்லோர்தாம் இல்லோரைக் கைதூக்கி அளிப்பாரால். 14
- கைம்மாறு கருதா உதவி
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”மக்களும், மற்ற எல்லா உயிர்களும் பெறுவதற் காகவே ஆண்டவன் அளவில்லாத உலகியற் பொருள்களைப் படைத்தளித்தான்.
சிலபேர்கள் அவற்றையெல்லாம் முறை கேடாகக் கவர்ந்து மறைத்துத் தீமைகள் செய்வதனால், பலபேர் பொருளின்றி பசி நோய் மிகுந்து உள்ளம் துன்புற்று வருந்துவர்.
உறுதி நூல்களைக் கற்றுத் தெளிந்தவர்கள் பொருள் இல்லாத ஏழைகளைக் கைதூக்கிக் காப்பார் களானால் அவர்களே நல்லவர் ஆவர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
வவ்வுதல் - கவர்தல். ஒளிக்குபு - மறைத்து.
சொல் - உறுதிநூல். அளித்தல் - காத்தல்.