தென்னைப் போல வளர்ந்த என்னை
என் பெற்றோர்கள் இரண்டு மரத்தை நட்டார்கள், ஒன்று தென்னை, இன்னொன்று என்னை.
தண்ணீர் ஊற்றித் தென்னை உயரமாக வளர்ந்தது. சோறூட்டி நானும் உயரமாக வளர்ந்தேன்.
தென்னைப் பூத்துக் காய்த்துக் குலுங்கியது. நானோ கண்கள் பூத்து, மனம் காய்ந்து, அழுது குலுங்கினேன்.
தேங்காய்கள் பல பறித்துக் கொண்டு எல்லோரும் தென்னையை மறந்தனர். அதன் ஓலையில் துடைப்பம் நெய்து வீட்டில் அழுக்கைப் பெருக்கிக் கூட்டினர்.
விதி என்னிடம் உள்ள இன்பங்களைப் பறித்துக் கொண்டு என் சுகத்தை மறந்தது. என் தலையில் பல சுமைகள் எனும் கூடுகளை நெய்து என் கண்களில் அழுகையைக் கூட்டியது.
இப்போதுத் தென்னைச் சாய்ந்து விட்டது. அதற்கு சாய்வு நாற்காலி இல்லை. நானும் சரிந்து விட்டேன், ஆனால் சாய்வு நாற்காலியின் மேல்...
இப்போதுத் தென்னங்கன்றுகள் வளர்ந்து பெரிய மரங்களாகிவிட்டது. என் பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டார்கள்.
சரிந்த தென்னை இப்போது விலைக்குப் போய்விட்டது. ஆனால் சரிந்த ஓய்ந்த நான் வேலைக்குப் போவதில்லை.
தென்னை மரம் அது கொடுத்த திருப்தியுடன் படுத்துவிட்டது. நான் கொடுத்தும் கொடுக்காத அதிருப்தியுடன் மீதமுள்ள என் வாழ்க்கையைப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.
தென்னைக்கு மனம் இல்லை. எனவே அது ஓய்ந்துவிட்டதை எண்ணி வருந்தவுமில்லை எனக்கு மனம் உண்டு என்பதால் கொடுத்தும், மன அலை ஓயாமல் புரண்டு கொண்டிருப்பதால் அமைதியை அள்ளி எடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கிறேன்.

