90 தந்தைதாய் துன்பத்தைத் தகையும் பிள்ளைகள் - மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும் 7

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

பயிர்களை யெடுத்திடப் பலன ளித்தல்போற்
செயிரினைக் கடிந்துநற் செயல்வி யந்தருந்
தயையொடுஞ் சேயினை வளர்க்குந் தந்தைதாய்
துயருறா வண்ணமத் தோன்றல் காக்குமே. 7

- மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”பயிர், களை எடுத்ததும் செழித்துப் பயன் தருவது போல, பிள்ளைகள் செய்யும் குற்றங்களைக் கண்டித்து நல்ல வழியில் செலுத்தி பேரன்போடு பிள்ளைகளை வளர்க்கும் தந்தை தாயைத் துன்பமுறாதபடி அப்பிள்ளைகள் காப்பார்கள்” என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.

செயிர் - குற்றம். வியந்தரும் - செலுத்தும். அருந்தயை - பேரன்பு. தோன்றல் - பிள்ளை. தகையும் - தடுக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Jan-23, 2:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

சிறந்த கட்டுரைகள்

மேலே