257 நன்று ஆய்வின்மையும் கைக்கூலி பெறுவதற்கு ஒப்பாகும் – கைக்கூலி 13

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

வரும்வா தியரோ டுறவுபற்று
..வரவு முதல்செய் குதல்விரைவில்
கருவி விவாதம் தீர்க்காது
..காலங் கழித்தல் சோம்பலினால்
உருவ வழக்கின் நிலையினைநன்
..குணராத் தன்மை பொதுநீங்கல்
பொருவில் இவையா தியபுரைகள்
..இலஞ்ச மதனைப் பொருவுமால். 13

- கைக்கூலி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”வழக்காட வருபவர்களுடன் நட்புக் கொள்வது, கொடுக்கல் வாங்கல் ஆகிய முதலீடு செய்வது,

விரைவில் நுணுகி ஆராய்ந்து வழக்கைத் தீர்க்காதது, வீண் காலம் கடத்துவது,

சோம்பேறித் தன்மையினால் வழக்கின் உண்மை நிலையினை நன்கு உணர்ந்து தெளியாதது,

நடுநிலைமை தவறுவது முதலிய குற்றங்கள் பலவும் கைக்கூலி பெறுவதற்கு ஒப்பானதாகும்” என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.

கருவி - நுணுகி. விவாதம் - வழக்கு. பொது - நடுநிலைமை, புரைகள் - குற்றங்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Jan-23, 2:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

சிறந்த கட்டுரைகள்

மேலே