277 செல்வச் சுமையினர் சிறிதும் இரங்கார் – கடும்பற்று 6
கலிவிருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)
வேம்புதே னீயுமோ வெயில்தண் ணாகுமோ
பாம்பமு தளிக்குமோ பரிவில் பூரியர்
தாம்பொதி யாளெனத் தாங்கும் பொன்னினைத்
தேம்புமா துலர்க்குளஞ் சிரந்த ளிப்பரோ. 6
– கடும்பற்று, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”வேம்பு தேனையும் தேன் சுவையையும் தருமா? வெயில் குளிர்ச்சியைத் தருமா? பாம்பு சாவா மருந்தாகிய அமுதத்தைத் தருமா? தராது!
அதுபோல, தீமையான குணமுடையோர், தாங்கள் பொதியாளர் போலச் சுமக்கும் பொன்னை வாடி வருந்தும் ஏழைகளுக்கு மன மகிழ்ந்து அளிப்பார் களா?” என்று கேட்பதோடல்லாமல் செல்வத்தைச் சுமப்பவர்கள் மனம் இரங்கி எளியவர்களுக்குத் தரமாட்டார்கள் என்கிறார் இப்பாடலாசிரியர்.
தண் - குளிர்ச்சி. அமுது - சாவாமருந்து.
தேம்பும் - வாடும். ஆதுலர் - ஏழைகள்.
பூரியர் - கீழோர், தீமையான குணமுடையோர்