137 கணவனே மனைவியின் காப்புயிர் ஆகும் - கணவன் மனைவியர் இயல்பு 29

தரவு கொச்சகக் கலிப்பா

நள்ளிரவில் தமயந்தி நளன்றனையே பிரிந்தபின்னுந்
தெள்ளுயிர்நீங் கிலளென்னச் சேடிநீயும் பொய்யுரைத்தாய்
உள்ளுயிரே பத்தாவா வுடையகற்பி னார்க்கவன்றான்
தள்ளியகன் றால்வேறு தனியுயிரே(து) உரையாயே. 29

- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நடு இரவில் தமயந்தி நளனைப் பிரிந்த பின்னும் அவளது பரிசுத்தமான உயிர் நீங்கவில்லையே என்று நீ பொய்யுரைக்கின்றாய் தோழி!

தன்னிடம் உள்ள உயிரே கணவனாக உடைய கற்புடைய பெண்களுக்கு, அக்கணவன் தானே பிரிந்து வேறிடத்திற்குப் போனாலும் மனைவி உயிர் விடுவதற்கு அவளுக்கு தனியுயிர் வேறு ஏது என்று சொல்வாயாக” என கணவனே மனைவியின் உயிரைக் காக்கும் காப்பாகும் என்று இப்பாடலாசிரியர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை கூறுகிறார். .

சேடி - தோழி. பத்தா - கணவன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Jan-23, 7:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே