138 கற்புடையார் மன்னன் கைவாளுக்கும் அஞ்சார் - கணவன் மனைவியர் இயல்பு 30
தரவு கொச்சகக் கலிப்பா
நரபதிநீ யானாலு நண்பரின்பா தத்துகட்குன்
சிரமகுட நிகராமோ சேர்கிலையேல் கொல்வனெனக்
கரவாளை யுருவிநின்றாய் கற்பினுக்கோர் குறைவின்றித்
தரமாநீ யெனைக்கொல்லிற் றந்தைதாயுங் குருநீயே. 30
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
“மன்னவன் நீயானாலும் என் தலைவன் திருவடித் துகளுக்கு உன் தலை மேல் உள்ள கிரீடம் ஒப்பாகுமா? உன்னை யான் சேராவிட்டால் கொல்லுவேன் என்று கைவாளை உருவி நிற்கின்றாய்!
என் சிறந்த கற்புக்கு ஒரு குறைவும் நேராமல், உறுதியாக என்னைக் கொன்று விட்டால், எனக்கு தந்தை தாய் குரு முதலியனவாக நீயே ஆவாய்” என்று அஞ்சாமல் மன்னனிடம் தலைவி கூறுவதாக இப்பாடலாசிரியர் உரைக்கிறார்.
நரபதி - மன்னன். நண்பர் - தலைவர். சிர மகுடம் - தலைக்கிரீடம்.