நன்கு திரண்டு பெரியவாம் ஆற்றவும் முன்கை நெடியார்க்குத் தோள் – பழமொழி நானூறு 267

நேரிசை வெண்பா

எங்கணொன் றில்லை எமரில்லை என்றொருவர்
தங்கண் அழிவுதாம் செய்யற்க - எங்கானும்
நன்கு திரண்டு பெரியவாம், ஆற்றவும்
முன்கை நெடியார்க்குத் தோள். 267

- பழமொழி நானூறு

பொருளுரை:

எம்மிடத்து ஒரு பொருளும் இல்லை; எமக்கோ சுற்றத்தாருமில்லை என்று நினைத்து ஒருவர் தம்மிடத்து வரும் பெருமையை அழிக்கக் கூடியனவற்றைச் செய்யாதொழிக;

எங்கே பிறந்தவர்க்காயினும் மிகவும் முன்கை நீளமாக உடையவர்கட்கு தோள்கள் மிகவும் திரட்சியுற்றுப் பெரியனவா யிருக்கும்.

கருத்து:

பெருமையை அழித்தற்கு உரியனவற்றைத் தாம் செய்யாதிருக்க வேண்டும். அதனால் மிக்க புகழ் உண்டாகும்.

விளக்கம்:

முன்கை நெடியார்க்குத் தோள் பெரிதாயிருத்தல் போல, அமைந்த பெருமையை அழித்தற்கு உரியனவற்றைத் தாம் செய்யாதிருப்பதுவே மிக்க புகழ் ஆகும்.

'நன்கு திரண்டு பெரியவாம் ஆற்றவும் முன்கை நெடியார்க்குத் தோள்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Feb-23, 9:50 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே