370 பல்லக்கைத் தான் சுமக்கும் பண்பே தற்புகழ்தல் – தற்புகழ் 3

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும். நெடில், நெடில் ஒற்று வராது)

தன்துதி பிறர்சொலத் தகுந்தன் வாயினால்
ஒன்றுறத் தன்துதி யோதல் ஊர்ந்துதான்
சென்றிடும் ஊர்தியைச் சிவிகை யாரின்றித்
துன்றுதன் தோளினால் சுமத்தல் போலுமே. 3

– தற்புகழ், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”தன் புகழைப் பிறர் கூறுவதே தகுந்ததாகும். தன் வாயினால் தன் பெருமையைத் தானே புகழ்வது, தான் செல்லும் பல்லக்கைச் சுமக்கும் ஆட்கள் இல்லாமல் தானே தன் தோளில் சுமந்து செல்வதற்கு ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
.
சிவிகையார் - பல்லக்குச் சுமப்போர்.
ஊர்தி - பல்லக்கு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Feb-23, 2:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே