தனக்கின்னா இன்னா பிறர்க்கு - பழமொழி நானூறு 266
இன்னிசை வெண்பா
வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு
நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்
புனப்பொன் அவிர்சுணங்கிற் பூங்கொம்ப ரன்னாய்!
தனக்கின்னா இன்னா பிறர்க்கு. 266
- பழமொழி நானூறு
பொருளுரை:
புனத்திற்படும் பொன்போல விளங்கும் தேமலையுடைய பூங் கொம்பை ஒப்பாய்!
தனக்குத் துன்பந் தருவன பிறருக்கும் துன்பந் தருவனவாம்.
ஆதலால், செய்கின்ற செயலில் பயன் ஒரு சிறிதுமில்லாமல், பகைமை ஒன்றே கொண்டு ஆராய்ந்து பிறர் வருந்தத்தக்க செயல்களைச் செய்தலை ஒழிதல் வேண்டும்.
புனம்
Upland fit for dry cultivation; மலைச்சார்பான கொல்லை கானவன் சூடுறு வியன்புனம் (அகநா. 368)
கருத்து:
பிறரையும் தம்மைப் போல நினைத்து, தீங்கு செய்யாதிருத்தல் வேண்டும்.
விளக்கம்:
பயன் ஒன்றுமின்றிப் பகையால் பல போலிச் சான்றுகளை ஆராய்ந்து கொண்டு துன்பம் செய்வார் என்பார், 'நினைத்துச் செய்யாமை' என்றார்.
'தனக்கின்னா இன்னா பிறர்க்கு' -இஃது இச் செய்யுளில் வந்த பழமொழி.