611 எல்லார்க்கும் அன்புசெய ஈந்தான் இவ்வுடல் - உடன் பிறந்தார் இயல்பு 4
கலிவிருத்தம்
(கூவிளங்காய் விளம் காய் விளம்)
நாடுவேறு குலமொடு நலமு(ம்)வேறு ளாரையும்
நீடுநாரொ டோம்புதல் நீதியென்னி னொருவயிற்(று)
ஊடுபோந்த சோதர ரொத்துவாழ்கி லாரெனின்*
வீடுமூடும் வாய்நலம் வீடு(ங்)கேடுங் கூடுமே. 4
- உடன் பிறந்தார் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
நாடு பிறப்பு நடை யுடை பழக்கவழக்கம் முதலிய நலமெலாம் வேறுபட்ட மக்களும் ஒருவரோடொருவர் உடன்பிறப்புப் போல் ஒற்றுமையுற்று ஒருவருக்கொருவர் வேண்டுவ வுதவி வாழ்வதே உயர்ந்த மக்கட்பிறப்பின் சிறந்த தன்மையும் முறைமையுமாகும்.
அப்படியிருக்க, ஒரு தாய்வயிற்றுப் பிறந்த உடன்பிறப்பாளர்கள் ஒற்றுமையுடையராய் வாழ்கிலாரென்றால் அந்தோ! என்சொல்வது?
அப்படி வாழாவிட்டால் அவர்களுக்குப் பேரின்பப் பெருவீடும் அடைபடும். வாய்ந்த குடும்பநலம் நாட்டுநலம் எல்லாம் பயனின்றி அழியும். சொல்லொணாப் பெருங்கேடுகளும் பொருந்தும்.
ஆகவே, மிகுதியும் முயன்று அன்புடன் ஒற்றுமையாக வாழ்வதே ஏற்புடைத்தாகும்.
குலம் - பிறப்பு. நீடு - அழியாத. நார் - அன்பு. நீதி - முறைமை.
வீடு - பேரின்பப் பெருவீடு. வீடும் - அழியும். கூடும் - பொருந்தும்.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
