ஸ்ரீ சாயிபாபா தமிழ் மாலை 2
ஸ்ரீ சாயிபாபா தமிழ் மாலைத் தொகுப்பை இயற்றியவர் எங்கள் ஊரைச் சேர்ந்த ச.சோமசுந்தரம் என்ற சனகை.கவிக்குஞ்சரம் ஆவார்.
ச.சோமசுந்தரம், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சோழவந்தான் என்ற ஊரில் தெற்கு ரத வீதியில் வாழ்ந்து வந்த சண்முகம் பிள்ளை – தெய்வானை அம்மையாருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவர் தன் ஐந்தாம் வயதில் தெற்கு ரத வீதியின் மேற்குப் பகுதியில் அமைந்த சிதம்பர விநாயகர் கோயிலின் திண்ணைப் பள்ளியில் ஆசிரியர் அழகர்சாமி தேசிகரிடம் ஆரம்பக் கல்வி கற்றார்.
தன் 12 ஆம் வ்யதில் இவர் தன் மாமனாகிய பெரும்புலவர், இலக்கணக் கடல் அரசஞ் சண்முகனாரிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். தன் 14 வயதிலேயே பாடல்கள் இயற்றும் திறமை வாய்க்கப் பெற்றார். இவரது பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த அரசஞ் சண்முகனாரும், மற்ற புலவர்களும் இவருக்கு ‘கவிக்குஞ்சரம்’ என்று பட்டம் ஈந்தனர். இவர் பின்னாளில் கவிக்குஞ்சரம் பிள்ளை என்றழைக்கப் பட்டார்.
இவர் சந்தப் பாடல்கள், கும்மிப் பாட்டு, காவடிச்சிந்து, வழிநடைச்சிந்து, தோத்திரப் பாமாலைகள், வண்ணப் பாடல்கள், கீர்த்தனங்கள், கண்ணிகள் இயற்றுவதிலும் இணையற்று வழங்கினார். தன் 20 வயதுக்கு மேல் நாடகக் குழுக்களுக்கு இவர் பெயரை ’முத்திரை’யாக வைத்து தக்க பாடல்கள் புனைந்து தருவதைத் தொழிலாகக் கொண்டார்.
இவர் தன் வாழ்நாளிலேயே சீரடி சாய்பாபா அவர்களின் மகிமையை அறிந்து அவரைப் பற்றி பக்திப் பாடல்களை காப்புச் செய்யுள் நீங்கலாக 28 வெண்பாக்களில் எழுதியிருக்கிறார்.
என் தகப்பனார் கைப்பிரதியாக இருந்த இந்த ‘ஸ்ரீ சாய்பாபா தமிழ் மாலை’யை என் இளைய தம்பி V.K..வெங்கடசுப்ரமணியனின் மாமனார் சின்னாளபட்டியிலிருக்கும் திரு.T.S. இரத்னம் முதலியார் அவர்கள் மூலம் அதே ஊரிலிருக்கும் புலவர் திரு. துரை. தில்லான் உதவியுடன் பதிப்பித்தார்கள்.
'ஸ்ரீ சாயிபாபா தமிழ் மாலை' யிலிருந்து 5 - 8 பாடல்களைத் தருகிறேன்.
துன்பம் வாராது காப்பவரே
நேரிசை வெண்பா
உள்ளபடி உன்னை உணர்வார் தமக்கின்னல்
எள்ளளவும் வாராமல் இன்பருளும் – வள்ளலே
மாயப்ர பஞ்ச வலியைக் கடந்திட்ட
சாயிபா பாவே சரண். 5
ஊக்கம் தருபவரே
நேரிசை வெண்பா
(’ர்’ இடையின ஆசு; ‘க்’ எதுகை)
ஊக்கம் குறையாமல் உள்ளம் களிகொள்ளும்
மா’ர்’க்கம் தனைப்புகட்டும் வள்ளலே – பா’ர்’க்குள்ளோர்
வாயார வாழ்த்தி வணங்கத் தகும்பெரிய
சாயிபா பாவே சரண். 6
மகானாகத் தோன்றியவரே
நேரிசை வெண்பா
ஏசுவொடு புத்தர் நபிஎன்பார் போன்றுலகு
பேசப் பிறந்த பெருமானே – தேசத்தில்
ஆயும் கலைகள் அறுபத்து நாலுமுணர்
சாயிபா பாவே சரண். 7
எத்தர்களையும் திருத்துபவரே
நேரிசை வெண்பா
ஏமாற்றப் பார்க்கும் இழிமக்கள் நெஞ்சத்தை
நீமாற்றி யிங்கவரை நேர்திருத்திப் – பூமீது
தாயன்பு கொண்டு தமியேற் குதவச்செய்
சாயிபா பாவே சரண். 8
(தொடரும்)