602 திருந்தா மக்களைத் தெய்வமும் ஒறுக்கும் - மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும் 2

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு)

முறையில்சே யரைத்தன்ன முனிய வஞ்சுவீர்
கறைமிகு மவரைப்பார் காக்கும் வேந்தனும்
இறைவனுந் தண்டனை யியற்று வாரினித்
தரையிலெவ் வாறதைச் சகித்துய் வீர்களே. 2

- மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

நன்னெறி யொழுகாது புன்னெறி யொழுகும் நலமில்லாத தீயமக்களைச் சிறிது சினந்து நல்வழிப் படுத்த அஞ்சும் பெற்றோர்களே!

கழுவப்படாக் குற்றம் கெழுமிய மக்களை உலகங் காக்கும் வேந்தனும், அண்டமுங் காக்கும் ஆண்டானும் முறைமுறையாய்த் தண்டிப்பர். அத்தண்டனைகளைத் தடுக்க உங்களால் முடியாது. அந்தோ! அவற்றைக் கண்டும் கேட்டும் எவ்வாறு பொறுத்து வாழ்வீர்கள்?

முறை - ஒழுங்கு. சேய் - மக்கள். முனிய - சினக்க. கறை - கழுவமுடியாக் குற்றம்.
சகித்தல் - பொறுத்தல். தன்னம் - சிறுமை; சிறிது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Feb-23, 10:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே