இன்னிசை இருநூறு - வாழ்த்து 6

இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது.

அக்காலத்தில் இக்கவிகளையெல்லாம் கேட்ட கந்தசாமிக் கவிராயர், இவைகள் பெரிதும் பயன் தரவல்லன என்று கருதி, 200 வெண்பாக்களைத் தொகுத்து, இயன்றவரை பொருட்பொருத்தம் நோக்கி, 20 அதிகாரமாகச் செய்து இன்னிசை இருநூறு என்ற பெயருடன் 1904 ல் விவேகபாநு 4 வது தொகுதியில் வெளியிட்டார்.

இந்நூல் மதுரையில் விவேகபாநுப் பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இப்பாடல்களுக்கு உரையெழுதும் முயற்சியாக நண்பர் திரு.கா.எசேக்கியல் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அதற்கிசைந்து அவர் எனக்களித்த ஆறாம் பாடலின் உரையை இங்கு சமர்ப்பிக்கிறேன். இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

பாடல் 6:

நீத்தாரைப் போற்றுதூஉம் நீத்தாரைப் போற்றுதூஉம்
நேத்திர மென்ன வுலகை நெறிநிறீஇ
மூத்த வறிவினா னூற்பொருண் முற்காட்டி
ஆத்தனையுங் காட்டிவிட லான். 6

நிறீஇ – நிறுவி, ஆத்தன் – கடவுள், நீத்தார் - இச்சைகளை நீக்கிய துறவி

தெளிவுரை:

துறவிகள் எனப்படும் புறப்பற்று ஆகிய ’எனது’ என்பதுவும், அகப்பற்றாகிய ‘யான்’ என்பதுவுமாகிய இரண்டினையும் வெறுத்து ஒதுக்கி விட்டுவிடுபவர்களைப் போற்றிப் பாடுகிறேன். கண்கள் சரியான வழியினைக் காண்பித்து நடந்து செல்ல உதவுவது போல, தம்முடைய முதிர்ச்சி பெற்ற நடைமுறை தெரிந்த அறிவின் காரணமாக, நூல்களின் உண்மைப் பொருளையும், பயனையும், உலகத்து மக்களுக்கு நன்னெறிகளில் நின்று நிலைக்கும்படி, முன் மாதிரியாக எடுத்துக் காட்டி, இறைவழியையும் ஆற்றுப்படுத்திக் காட்டிவிடும் காரணத்தால், துறவிகளாகிய பற்றுக்களை நீத்தவர்களைப் போற்றிப் பாடுகிறேன் என்கிறார் பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்.

இங்கு திருக்குறளில் ’நீத்தார் பெருமை’ அதிகாரத்தில் ஐயன்,

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிபு. 21

என்று குறிப்பிட்டுள்ளது சிந்திப்பதற்குரியது.

இக்குறளுக்கு உரை எழுதியவர்கள், தமது ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்றுகளை விட்டவர்களின் பெருமையை, நூல்களெல்லாம் சிறந்த பெருமையாகக் கொள்கின்றன என்ற வகையில் எழுதியுள்ளனர். அவ்வகையில் சண்முகனார் முந்தைய பாடலில் ’நூலினைப் போற்றுதூஉம்’ என்று நூலினைப் போற்றியவர், இப்பாடலில் நூல்கள் போற்றும் பெருமைக்குரிய நீத்தவர்கள் பற்றி ’நீத்தாரைப் போற்றுதூஉம்’ என்று பாடுவது அறிந்து இன்புற ஏற்றது.

விளக்க உரை: திரு.கா.எசேக்கியல்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Feb-23, 8:43 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே