473 கலையெலாம் அறவு ணர்ந்த தக்கோர் நொறிலே நொறில் - அறஞ்செயல் 25

எண்சீர் கழிநெடில் ஆசிரிய விருத்தம்
(மா விளம் விளம் விளம் /
மா மா மா விளம்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)

விறலி கற்பது வேகற்பு கூனுடல்
= விருத்தை கற்ப ரிதன்று கலையெலாம்
அறவு ணர்ந்ததக் கோர்நொறி லேநொறில்
= அஞ்ஞை கொண்ட அடக்கம் கதழ்வன்று
திறலி னார்பொறை யேபொறை யற்பமுந்
= திறலி லார்தம் பொறுமை தலையன்று
மறலு ளார்கொடை யேகொடை சீரெலாம்
= வாய்த்த செல்வர் கொடைபெ ரிதன்றரோ. 25

- அறஞ்செயல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

கட்டிளமை வாய்ந்த பதினாறாண்டுப் பருவப்பெண் கற்புநிறை தவிராது `ஒருவனைப்பற்றி ஓரகத்திருத்தலே சிறந்த கற்பாம்.

உடற் கூனும் அழகின்மையும் முதுமையும் வாய்ந்தவள் காக்கும் கற்பு அத்துணைச் சிறந்ததன்று.

மெய்ந்நூற்கல்வி முற்றவுணர்ந்த பெரியோர் புலனடக்கமே உண்மை அடக்கமாகும்.

அறிவிலான் அடக்கம் பெருமை தருவதாகாது.

`எல்லாம் ஒறுக்கும் மதுகை உரனுடையாளன், பொறுக்கும் பொறையே பொறையாம்.

சிறிதும் வலிமையில்லாத கோழையின் பொறுமை உயர்ந்ததன்று.

வறுமையுள்ளவர் கொடுக்கும் கொடையே அன்பு அருள் வளர்க்கும் இன்பக்கொடையாம்.

இடம் பொருள் ஏவல் முதலிய சிறப்பு வாய்ந்த செல்வர் கொடை பெரிதாகாது.

விறலி - பதினாறாண்டுப்பெண். விருத்தை - முதியவள். நொறில் - அடக்கம். அஞ்ஞை - அறிவிலான். கதழ்வு -பெருமை. அற்பம் - சிறிது. திறம் - வலிமை. மறல் - வறுமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Feb-23, 8:31 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே