472 பிறவாப் பெருஞ்சாவால் பெரும்பொருள் உருத்தோன்றும் – அறஞ்செயல் 24
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)
அறப்பெருங் கடலன் னான்தன்
= அடிமலர் காணா வண்ணம்
மறைப்பதெய் உடற்ப டாமா
= மரணத்தால் அதனைப் பாரில்
துறப்பவர்க் குடனே அத்தன்
= சொரூபமே தோன்ற லாலிங்(கு)
இறப்பது பிறப்பி னுந்தான்
= இனிதற வர்க்கு மாதோ. 24
- அறஞ்செயல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
அறவாழி அந்தணனாகிய முழுமுதல்வனின் திருவடித் தாமரையைக் காணமுடியாதபடி மறைப்பது நம்முடைய இளைத்துப் போம் இயல்பு வாய்ந்த திரைபோன்ற இவ்வுடல்.
இனிப் பிறந்திறவாப் பெருஞ்சாவால் அவ்வுடலை உலகத்தில் விடுபவர்க்கு, விட்ட அப்பொழுதே தந்தையே அனைய கடவுள் தன் திருஉருவினைக் காட்டியருள்வன்.
அவ்வுருத் தோற்றம் கிடைப்பதால் அறவோர்க்கு இவ்வுலகில் பிறப்பதினும் இறப்பதே மிகவும் இனிமை யுடைத்து.
எய்த்தல் - இளைத்தல். படாம் - திரை. மாமரணம் - பிறவாப் பெருஞ் சாவு.