நாணுடையாள் பெற்ற நலம் – நாலடியார் 386

நேரிசை வெண்பா

உள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; - தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம் 386

- கற்புடை மகளிர், நாலடியார்

பொருளுரை:

உள்ளத்தில் இயற்கை நுண்ணுணர்வுடையதாய் ஒருவன் கற்ற கல்வியறிவை ஒத்ததாயும்,

இயற்கையிற் கொடைக்குணம் உடையானொருவனிடத்து மாட்சிமைப்படுகின்ற ஒள்ளிய செல்வத்தை ஒத்ததாயும்,

வாட்பயிற்சியில் தெளிவடைந்த வீரமிக்க ஆடவனொருவன் கையில் விளங்கும் கூரிய வாட்படையை ஒத்ததாயும் இருக்கின்றது நாணம் முதலிய பெண்ணீர்மைகளுடைய கற்புடைப் பெண்ணொருத்தி பெற்ற அழகு முதலிய நலங்களாகும்.

கருத்து:

மகளிர்க்கு நாண முதலிய பெண்மைப் பண்புகளிருப்பின், அவர்க்கு ஏனை நலங்களுஞ் சிறக்கும்.

விளக்கம்:

அற்றென்பதை ஒண்பொருட்குங் கொள்க. உவமைகளால் அறிவும் கொடையும் வீரமுமாகிய ஆடவரியல்புகள்1 பெறப்பட்டன; அனைத்தே மகளிர்க்கு நாண் என்பது கருத்து.

குறித்த ஆணியல்புகள் இன்றேற் கல்வியும் பொருளும் கருவியும் மாட்சிமைப் படாமை போல, நாண் முதலிய பெண்ணீர்மைகள் இன்றேல் எவ்வகை நலனும் பயனில்லன வென்பதாம்.

நலமென்றது, அழகு முதலிய பலவகை நன்மைகளை, இவை யிரண்டு பாட்டானும் கற்புடை மகளிர்க்குரிய நாணினது நன்மை கூறப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Feb-23, 5:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

சிறந்த கட்டுரைகள்

மேலே