உள்ளிருந்து அச்சாணி தாங்கழிக்கும் ஆறு - பழமொழி நானூறு 276

இன்னிசை வெண்பா

சொல்லெதிர்ந்து தம்மை வழிபட்(டு) ஒழுகலராய்க்
கல்லெறிந்தாற் போலக் கலாந்தலைக் கொள்வாரை
இல்லிருந் தாற்ற முனிவித்தல் உள்ளிருந்(து)
அச்சாணி தாங்கழிக்கு மாறு. 276

- பழமொழி நானூறு

பொருளுரை:

தாங்கூறும் அறிவுரைகளை ஏற்று தம்மை வழிபாடு செய்து ஒழுகாதவராய், கற்களை வீசினாற் போன்ற தீய சொற்களைச் சொல்லிப் பகைமையை மேற்கொள்வாரை,

அவர் வீட்டினுள்ளே இருந்து மிகவும் அவரை முனிவித்தல் தேரின் உள்ளே இருந்து அச்சின்கண் சொருகும் ஆணியைத் தாமே நீக்கிவிடுவது போலாகும்.

கருத்து:

கீழ்மக்களது அருகில் இருந்து அவருக்குச் சினமூட்டுதல் தனக்குத் தீங்கினை விளைவித்துக் கொள்வதாக முடியும்.

விளக்கம்:

ஆற்ற முனிவித்தல் என்பது அவர்கள் செய்கின்ற தீய செயல்களை அடிக்கடி எடுத்துக் கூறியும் அறிவுரைகளைக் கூறியும் வருதலால் அவர் மிக்க சினங்கொள்வர். அதனால் மிக்க இன்னல்களைச் செய்வார்கள்.

தேரினுள்ளே யிருந்தவன் அச்சாணியை நீக்கி அதனால் வருந் துன்பத்தைத் தானே தேடிக்கொள்ளுதல் போல் தீயோர் வீட்டிலிருந்து கொண்டு அவர்களை வெகுள்விப்பதும் தீமை ஆகும்.

தீயோர் தாமே தீங்கு செய்தலன்றித் தீங்குசெய்வோர் பலரிடமிருந்தும் காப்பாற்றி வந்தமையை ஒழிவர் ஆக, அவரும் பிறரும் நலிவர் என்பதாம்.

'உள்ளிருந்து அச்சாணி தாங்கழிக்கும் ஆறு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Feb-23, 6:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே