எஞ்ஞான்றும் எங்கணவர் எந்தோள்மேற் சேர்ந்தெழினும் நாணுதுமால் – நாலடியார் 385
நேரிசை வெண்பா
எஞ்ஞான்றும் எங்கணவர் எந்தோள்மேற் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; - எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையாற்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார் 385
- கற்புடை மகளிர், நாலடியார்
பொருளுரை:
எம் கணவர் எந்நாளும் எம் தோள் மேல் முயங்கி யெழுந்தாலும் தலைநாளிற் கண்டேம் போல் அவர் பால் யாம் நாணமுடையமாய் இருக்கின்றேம்;
அவ்வாறிருக்க, பொருள் வேட்கையால் எந்நாளும் ஆடவர் பலர் மார்புகளைச் சற்றும் நாணின்றிக் கூடியொழுகும் பரத்தையர் தமதுள்ளத்தில் என்னதான் உடையராய் இருக்கின்றனரோ?
கருத்து:
கற்புடை மகளிர்க்கு நாணம் முதலிய பெண்மை இயல்புகள் அணிகளாகும்.
விளக்கம்:
எம் என்னும் பன்மை உயர்வு கருதிற்று.1 தோள் இன்பந் துய்த்தற்கு இலக்கணை. ஆலுங் கொல்லும்;
அசை.பொருள் நசையால் என்றது இயல்பு உணர்த்தியபடி.பொருணசையாற் சேர்ந்தொழுகலின் காதலுமின்றிப் பன்மார்பு சேர்ந்தொழுகலின் கற்பும் நாணுமின்றி அவம்படுதலின், அவரெல்லாந் தமதுயிரில் என்னை கெழீஇயினரோ என்று குலமகள் ஒருத்தி தனக்குள் வியந்து கூறுவாளாயினள்;.
உயிரினுஞ் சிறந்ததாய் நாணும் நாணினுஞ் சிறந்ததாய்க் கற்புமிருத்தலின்,2 அவை இரண்டும் இல்லாத உயிர் யாதுமில்லாத தாயிற்று.
ஆதலின் கெழீஇயினரோ வென்னும் வினா ஈண்டு எதிர்மறைப் பொருளது;
முதன்மை பற்றி நாண் கூறினமையின், அச்சம், மடம் பயிர்ப்பென்னும்3 ஏனைப் பெண்மை இயல்புகளுங் கொள்ளப்படும்!