இதயம் திறந்தநாள்

இனியவளுக்கு - தசாப்தம் பிளஸ்
================================
"இதயம் திறந்தநாள் (திருமணநாள்) வாழ்த்து" -

அவளை அதிகம் நேசிக்கிறேன்
அவளை அதிகம் யாருக்கும் அறிமுகப்படுத்தியதில்லை
அவள் அழகிகளின் அழகி
அவள் பூக்களை விரும்புகிறவள் அல்ல
அவளை பூக்களோடு ஒப்பனைச் செய்வதில்லை நான்
அவள் மொத்தப் பூக்களுடைய தனிப் பிரபஞ்சம்
அவள் எல்லாப் பூக்களுடை ஏழு பருவங்கள்
அவளாவன அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
-என் காலத்திற்கு பின்னாலான அவள் நிலை செம்மல்-
அவளுக்கு கவிதைகள் தெரியாது
அவளைப்பார்த்தால் கவிதைகள் விழும்
அவளுக்கு பாடல் வராது
அவளைப்பார்த்தால் இசை அரும்பும்.
அவள் நேசம் சொல்வதறியாள்
அவள் நேசித்துக் கொண்டிருக்கிறாள்.
அவள் சிரிக்கும்போது என் கவிதைகளைத் தோற்கடிக்கிறாள்
அவள் கோபிக்கும்போது என் கர்வங்களைத் தோற்கடிக்கிறாள்
அவள் அதிகம் பேசாள்
அவளைப் பார்ப்போரை உளறச் செய்வாள்
அவள் பார்வைக்கிடங்கு
அவள் காதலின் ஏகாந்திதி
அவள் திமிரின் அகராதி
"என் குறும்புத்தனங்களுக்கு அப்பாற்பட்டவள், சம்பிரதாயங்களின் எல்லை உடைத்து கேசம் கோதி பகுத்தறிவு காதல் செயகிறாள்" எத்தனைப்பிள்ளைகளை பிரசவித்தால் தான் என்ன ம் அணைக்கையில் அதற்குள்ளே இன்னும் குழந்தையாகிறாயே" சாப்பிடும்போது என் கைய்யிருக்கும் முதல் உருண்டைப் பிடுங்க நம் குழந்தைகளுக்கு முன்னாலேயே நீ வந்தமர்ந்துவிடுகிறாய், தூங்கும் போதுகூட விளக்கணைக்கும் முன்னால் என் கிடக்கைக்கு அருகில் கிடக்கையிட்டுக் கொள்வாய். சிலமுறை என் நெஞ்சாங் குழியில் சிந்தூர நுதலமிழ்த்தி என்னை உன் கிடக்கையாக்கிக் கொள்வாய், அதிலும் உனக்கே முதலிடம், காலப்போக்கில் குழந்தைகளே உன் கிறுக்குக்காதலைப் புரிந்துகொண்டார்கள், எந்தப் பெண்ணையும் நேசிக்கக் கற்றுக்கொடுத்தவள் நீ, எந்தப் பெண்மையிலும் இல்லாத பெண்மை நீ, எனக்குள் வந்த பெண்மை நீ,
நீ விளையாட்டாய் ஆரம்பித்ததை, இன்றெல்லாம் நான் ஸ்திரப்படுத்திக்கொண்டிருக்கிறேன், என்னை பழக்கிவிட்டாய்,
வீட்டில் ஆட்கள் நிறைந்திருக்கையில்,
நீ முந்திக்கொண்டு என்னை நெருங்கி வரும் அந்தந்த நேரங்களை இழக்கிறேன்.
இன்று பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்துவிட்டார்கள்,
நீயும் என்னைப்பார்த்து எப்போதும் கண்ணடித்துக்
கேட்கும் ஏதேனும் அபேட்சைப்போல அவர்களுக்காய் கொஞ்சம் வளர்கிறேனே என்று வளர்ந்துவிட்டாய். உன்னை பிரிந்திருக்கும் இந்த நாட்களின் அந்த நேரங்களில் இப்போது நான் நீயில்லாக் குழந்தையாகிவிட்டேன்.
அருகிருக்கையில், உன்னைவிட்டு
எப்படி இருக்கப்போகிறேன்
என்று சதா எண்ணிக்கொண்டிருப்பேன். இன்று
உன் அருகாமை சொல்லிக்கொண்டிருக்கிறது
நிமிர்ந்த ஆதாரமாக.

"இன்னுமுன்னை அதிகம் நேசிக்கிறேன் என்பதை"

ஒரு ஆயுளுக்கும் போதுமான முத்தங்களைக் கொடுத்துவிட்டாய், பொழுது போகாத நேரங்களில்,
நீ குடுத்த முத்தங்களை தப்பி எடுத்துக்கொண்டிருக்கிறேன்

புகைப்படம் எடுக்கும்போதெல்லாம், என்னைவிட அழகானவள் நீ என் அருகில் நிற்பதை கர்வமாகக் கொள்கிறேன். முதன் முதலில் ஸ்கூட்டி ஓட்டக் கற்றுக்கொடுத்து நன்றாக நீ பயணப்படப் பழகுகையில்
உன் பின்னால் ஏறி அமர்ந்துகொண்டேன், ஊரே அதை வேடிக்கைப்பார்த்தது, எனக்குள் மட்டும்
ஏதோ ஒரு உள்ளூர சந்தேஷ உணர்வூரல், இன்று கார் ஓட்டவும் கற்றுக்கொண்டாய், நம் பிள்ளைகளுக்கு
ஸ்கூட்டி ஓட்டக் கற்றுக்கொடுக்கிறாய், அடுத்தமுறை நான் ஊருக்கு வரும்போது, நம் காரில் உன் அருகில் நான் அமர இன்னுமொரு ராஜபாட்டை நிகழ்த்தவேண்டும்.

உன் ஆயுள் முடியும் ஒரு நாளிற்கு
முன்னாலாவது
என் ஆயுள் முடிந்துவிட
வேண்டும்.
உன் ஆசைகளை நிறைவேற்றுவதாய்
உனக்கு செய்துக் கொடுத்த
என் சத்தியங்களை
எப்படியாவது
நிறைவேற்றிட வேண்டும்.
என்னோடு வாழ்ந்துவிட்ட
திருப்தியை,
உன் மென்மெளனம் உணரும்
தருவாயை,
இவற்றையெல்லாம்
நுகரும் என் ஆகிருதி,
உன் அருகிருத்தல்வேண்டும்.
ஈரேழு ஜென்மங்களுக்குமான
பிரியங்களை
இப்பிறவியில் உன்னால் பெற்றுவிட்டேன்
இனி நீயில்லாத இன்னொருப் பிறவி
இங்கு வேண்டாமெனும்
உன் நீர்த்துளிகளின் ஆவி
என்னோடு கலந்திருக்க
அங்கிருந்து நான்
விடைப்பெறுதல் வேண்டும்
என் வெற்று ஆக்கை சுமந்த படுக்கையை
தூக்கி எறிந்துவிடாமல்
பற்றிக் கொண்டுவிடு
என் நினைவுகளின் ஆன்மாவின்
கருவரை அது
இனி எஞ்சியிருக்கப்போகும்
உன் ஆயுளுடன்
துணையிருக்கும்
என் குரலின் அசரீரி
அங்குதான் உன்னுடன் உரையாடிக் கொண்டிருக்கும்

என் மீசையின் ஸ்நேகிதிக்கு கேடிப்புருஷனுடைய
இதயம் திறந்தநாள்

பூக்காரன் கவிதைகள் - பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (20-Feb-23, 3:19 am)
பார்வை : 144

மேலே