இளைய தலைமுறை

உங்கள் அறிவுரைகள்
உங்கள் அனுபவங்கள்
உங்கள் வாழ்க்கைமுறை
எதுவும் எங்களுக்குத்
தேவையில்லை...
எங்களின் உலகம் வேறு
எங்களின் எதிர்பார்ப்புகள் வேறு
எங்களின் வாழ்க்கைமுறை வேறு..
எங்கள் வேகத்துக்கு
உங்கள் வேகம் ஒரு தடைக்கல்.
நீங்கள் பார்த்த உலகத்தில்
உங்கள் அனுபவங்கள் சரியாயிருந்திருக்கலாம்.
நாங்கள் பார்க்கும் உலகத்தில்
எங்கள் அனுபவங்கள் மாறிப்போயிருக்கிறது.
ஏன்? உலகமே மாறிப்போயிருக்கிறது.
உங்களின் அனுபவமே இதை
உங்களுக்கு சொல்லியிருக்கும்.
உங்கள் அனுபவத்தை நாங்கள்
உதாசீனப்படுத்தவில்லை - அதற்கு
வயதுமில்லை...அனுபவமுமில்லை.
ஒத்துக்கொள்கிறோம்.
ஒப்பிட்டு.... அழுத்தம் கொடுக்கும்போதுதான்
பிரச்சனையே எழுகிறது.
காலக்கொடுமைகள் உங்கள் நாட்களில்
நடக்கவில்லையா என்ன?
காலத்தின் அருமை
எங்களுக்கும் தெரியும்.
நாங்களும் தொட்டுப்பார்த்துதான்
நெருப்பு சுடுமென்று
அனுபவப்பட்டுக் கொள்கிறோமே.
உங்களுக்கு அதிலென்ன ஆதங்கம்?
உங்களுக்கு அனுபவம் எப்படி கிடைத்தது?
சுட்டுக்கொண்ட பின்தானே...
உங்கள் தோல்விகளை
வெற்றிப்படிகளாய் மாற்றிக்கொள்ள
அடிபட்டுத்தானே ஆகவேண்டும்.
ஒப்பிடாதீர்கள்...
எங்களின் சவால்களையும்
புரிந்து கொள்ளுங்கள்
புண் படுத்தாதீர்கள்...!
எங்களுக்கும் ஒரு
வாய்ப்பு கொடுங்கள்..!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (20-Feb-23, 10:45 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : ilaiya thalaimurai
பார்வை : 193

சிறந்த கவிதைகள்

மேலே