தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும் தட்டாமல் செல்லாது உளி - பழமொழி நானூறு 279

இன்னிசை வெண்பா

விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்
முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்
தட்டாமல் செல்லா(து) உளி. 279

- பழமொழி நானூறு

பொருளுரை:

தொட்ட அளவில் மெலியும் தளிரின் மேலே நின்றதாயினும், உளியானது தன்னை வேறொருவன் தட்டாமல் அத்தளிரை அறுத்துச் செல்லாது. அதுபோல, காரியத்தின் பொறுப்பை அவர்களிடத்தே விட்டு அவர்களையே செய்யுமாறு செய்த பின்னரும் இடையீடின்றி அவரை ஏவி ஆராய்தல் வேண்டும்.

கருத்துரை:

நமது காரியத்தைப் பொறுப்பாக ஏற்றுக்கொண்டு ஒருவர் செய்வாரேயாயினும், இத்துடன் பொறை கழிந்தது என்றிராது அவரை அடிக்கடி ஊக்கப்படுத்துதல் வேண்டும்.

விளக்கம்:

வியங்கொளல் - ஏவி ஆராய்தல். செயல் சரியாக முடியாவிட்டால் அதற்குத் தகுந்த வழிகளைக் கூறுதல் வேண்டும். செயல் தாமதமாகச் செல்லின் அவரை ஊக்கப்படுத்துதல் வேண்டும்.

'தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா துளி' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-23, 8:03 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 50

மேலே