நசையழுங்க வற்கென்ற செய்கை வாயுறைப் புற்கழுத்தில் யாத்து விடல் - பழமொழி நானூறு 283

இன்னிசை வெண்பா

ஒற்கப்பட் டாற்றார் உணர உரைத்தபின்
நற்செய்கை செய்வார்போல் காட்டி, நசையழுங்க
வற்கென்ற செய்கை யதுவால்அவ் வாயுறைப்
புற்கழுத்தில் யாத்து விடல். 283

- பழமொழி நானூறு

பொருளுரை:

வறுமையால் ஒறுக்கப்பட்டு அதற்கு ஆற்றாதவர்களாய் (ஒருவரையடைந்து) அவர் மனதிற் பதியுமாறு உரைத்தவிடத்து, அவர்க்கு நல்ல செய்கையைச் செய்வார் போன்று காட்டி அதனான் அவர் கொண்ட விருப்பம் கெடுமாறு வலிய செய்கையைச் செய்தொழுகுமது,

வாயிடத்தில் இடுவதாகக் காட்டிய அந்தப் புற்களை பசுவின் கழுத்தில் கட்டிவிடுவதனோடு ஒக்கும்.

கருத்து:

தம்பால் ஒன்று இரந்தாரைக் கொடுப்பதாகச் சொல்லி நீட்டித்து அலைய வைத்தல் அடாத செய்கையாம்.

விளக்கம்:

'உணர உரைத்தல்' என்பது அடுப்பு ஆம்பி பூத்ததெனவும், அதனால் முலை இல்லி தூர்ந்ததெனவும், அதனைச் சுவைத்து மகவு அழுகின்ற தெனவும் கூறுமாறு போல, வறுமையை உணர விரித்துரைத்தல். 'நசையழுங்க வற்கென்ற செய்கை' என்றது விரைவில் கொடாது நீட்டித்தலான் அவரை வருத்துதல்.

அது, ஒண் சுடர் நெடுநகர் வெளிறு கண் போகப் பன்னாள் இரங்கி வருந்துதல்.

புற்களை வாயிலிடுவார் போன்றுகாட்டி ஆவினது கழுத்தில் யாத்தால் பசு அதன் மேலுள்ள விருப்பத்தால், கழுத்திலுள்ளதைப் பெறும் பொருட்டு முயன்று துன்புறுதல்போல இரந்தார்க்கு ஒன்றீவதாகக் கூறி நீட்டிப்பின் அதனைப்பெற வேண்டுமென்ற ஆசையால் அவர்கள் பன்னாளும் நின்று துன்புறுவர். ஆதலால் நீட்டித்தலாகாது என்பதாம்.

'வாயுறைப் புற்கழுத்தில் யாத்து விடல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Feb-23, 4:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே