புதற்குப் புலியும் வலியே புலிக்குப் புதலும் வலியாய் விடும் - பழமொழி நானூறு 282

நேரிசை வெண்பா

உடையதனைக் காப்பான் உடையான் அதுவே
உடையானைக் காப்பதூஉ மாகும் - அடையின்
புதற்குப் புலியும் வலியே புலிக்குப்
புதலும் வலியாய் விடும். 282 - பழமொழி நானூறு

பொருளுரை:

சென்றடையுமாகில் காட்டிற்கு புலியும் பாதுகாவலாம்; புலிக்கு காடும் பாதுகாவலாய் நிற்கும்.

அதுபோல, தன்னிடத்திலுள்ள பொருளை இடையூறுபடாது காப்பாற்றுகின்றவனே பொருளுடையவன் எனப்படுவான்; அப்பொருள் தானே தன்னையுடையானை இடையூறு உறாமற் காப்பாற்றுகின்றதாகும்.

கருத்து:

பொருளை ஒருவன் காப்பாற்றினால் அவனைப் பொருள் காப்பாற்றும்.

விளக்கம்:

வலி என்பது இருவழியும் வலிமைக்கு ஏதுவாகிய பாதுகாவல் என்னும் பொருளைப் பயந்து நின்றது. புதல் என்பது ஈரிடத்தும் புதல்கள் நெருங்கியுள்ள காடு எனக் காட்டின் மேல் நின்றது.

புதல் - புல்பூண்டுகள்.

'புதற்குப் புலியும் வலியே புலிக்குப் புதலும் வலியாய் விடும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Feb-23, 4:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே