இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

ஏதோ பிரபலமானவர்கள் சொன்ன வார்த்தையாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம், நாம் ஒவ்வொருவரும் பல்வேறு சிக்கல்களில் மாட்டி அதில் இருந்து தப்பிக்க விழி பிதுங்கி வெளியேற முற்படும்போது மனதுக்குள் சொல்லியிருப்போம். அப்படித்தான் பிரபலமானவர்களும் கூட இந்த வார்த்தையை உபயோகித்திருப்பார்கள், அதனால் இந்த வார்த்தை நம் மனதுக்கு பிரபலமானதாக தெரிகிறது.
சரி..! இதுவும் கடந்து போகும் ஒத்து கொள்ளலாம், கடந்து போன பிறகு ? இந்த கேள்வியை நீங்கள் கேட்டால் ஒரே பதில்தான், இயற்கை நம்மை தாய் மூலம் பெற்று போட்டு விட்டு, உன்னை இங்கு வரவழைத்து விட்டேன், இனி மேல் நீதான் வாழ்க்கையை வாழவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் போராடுவதற்கு களம் அமைத்து கொடுத்திருக்கிறது.
இப்படி செய்யும் இயற்கையை நன்கு கவனியுங்கள், அது பாராபட்சமில்லாமல் எல்லா உயிர்களுக்கும், இதே முறையில்தான் அமைத்து கொடுத்திருக்கிறது. விலங்குகளாகட்டும், மனிதர்களாகட்டும், இல்லை கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிகளே ஆகட்டும் அவைகளும் வாழ்வதற்கு எதையாவது ஒன்றை தொற்றி வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மனிதர்களிடம் தொற்றும் போது மருந்துகள் மாத்திரைகள் மூலம் நாம் அவற்றை அழிக்கிறோம், அல்லது விரட்டுகிறோம். ஆனால் விலங்குகளில் தொற்றும்போது? கவனிக்கப்பட்டால் விலங்கு பிழைக்கிறது இல்லையென்றால் அந்த கிருமி பெருகி வாழ்ந்து அந்த விலங்கின் உடலை அழிக்கிறது.
இது போலத்தான் மனிதன் பிறந்து வளர, மற்றவர்களின் உதவியால் வாழ்ந்து ஒரு கட்டத்தில் அவர்களால் கழட்டிவிடப்பட்டு தனித்து வாழ இந்த சமுதாயத்துக்குள் நுழைகிறான். அங்குதான் எத்தனை இடர்பாடுகள், சிக்கல்கள், ஒவ்வொன்றையும் கடந்துகொண்டு தான் இருக்கிறான், “இதுவும் கடந்து போகும்” என்னும் வழி மொழியில்.
மனிதனுக்காவது கொஞ்சம் பரவாயில்லை, சிக்கல்கள்தான் அவனை சுற்றி வலை போட்டு கொள்கின்றன. ஆனால் மிருகங்களை எடுத்துக்கொண்டால் அவைகள் ஒவ்வொரு நாளும் விடிதலை பார்ப்பது என்பது எவ்வளவு சிரமம். குட்டி ஈன்றவுடனேயே அதன் உயிர் பய போராட்டம் ஆரம்பமாகி விடுகிறது. ஒவ்வொரு நாளும் அதன் உயிர் அதனிடம் இருப்பதில்லை, வேட்டையாடும் விலங்குகளின் கையில்தான் இருக்கிறது. அதில் மனித உயிர்களையும் சேர்த்து கொள்ளலாம், இயற்கையில் அவனும் ஒரு வேட்டையாடும் விலங்கு இனத்தை சார்ந்தவன் தான்.
எப்பொழுதுமே வேட்டையாடும் விலங்குகளில் இயற்கை அதற்கு கொடுத்திருக்கும் எச்சரிக்கை உணர்வால் அவைகள் மனித இனத்தை நம்புவதில்லை, மனித இனமும் அவைகளை நம்புவதில்லை. இவனது வசதிக்காக ஒரு சில தாவர உண்ணிகளை தனக்கு உதவுவதற்கும், உண்ணுவதற்கும் வளர்த்து கொள்கிறான். தன்னை பாதுகாத்து கொள்ள வேட்டை விலங்குகளையும் பயன்படுத்தி கொள்கிறான்.
விலங்குகள் இயல்பான நிகழ்வாக தண்ணீர் குடிப்பதற்கு ஏதாவது ஒரு குளம் குட்டையை நோக்கித்தான் செல்லவேண்டும். அங்கு சென்றால் கூட அந்த குளமோ, குட்டையோ அதில் இருக்கும் வேட்டை மிருகங்களுக்கு எவ்வளவு பயப்பட வேண்டியிருக்கிறது. இப்படி நித்தம் நித்தம் உயிர் வாழ்வதற்கே போராடும் சூழ்நிலையை நமக்கு தராமல், வாழ்வதற்கு இவ்வளவு உரிமைகள் கொடுத்திருக்கிறதே இந்த இயற்கை என்று சந்தோசப்பட்டு கொள்ள வேண்டும்.
இந்த உலகம் எப்பொழுதும் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ இயற்கை அமைத்து கொடுத்திருக்கிறது. இதில் சம அளவு வாய்ப்புக்களை எல்லா உயிர்களுக்குமாக இயற்கை பிரித்து கொடுத்திருக்கிறது.
இதில் மனித உடலுக்கு மட்டும், உணர, பேச, நிமிர்ந்து நடக்க, படுக்க, என்பது போன்ற வசதிகள் கொடுத்து விட்டதால், இயற்கையில் தன்னை சிறந்தவனாக கருதி கொள்கிறான். பிற உயிர்களை கிள்ளுக்கீரை என நினைக்கவும் செய்கிறான்.
இத்தனை வசதிகளை மனித உடலுக்கு கொடுத்தாலும் வாழ்க்கையின் சிக்கல்களை பிற உயிர்களை போல இவனும் சந்தித்துதான் வாழ வேண்டும் என்னும் கண்ணுக்கு தெரியாத விதியை ஒவ்வொரு மனித உயிர்களின் மீதும் அழுந்த பதித்து வைத்திருக்கிறான்.
மற்றபடி இயற்கை கொடுத்த உடற்கூறு வசதி, மற்றும் உணர்வுகளின் வசதிகள் காரணமாக மனித உயிர் தானாக ஆசையில் ஆரம்பித்து எல்லா உணர்வுகளுக்கும் ஆட்பட்டு அதில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் சிக்கி திணறி, வெளியேற முயற்சிக்கிறது. அப்படி வெளியில் வந்தால்.அவனுக்கு அல்லது அவளுக்கு, “இதுவும் கடந்து போகும்”.
இல்லையென்றால் அவர்கள் மாட்டிக்கொண்டு தவிக்கும் சிக்கல்களை கண்டுவிட்டு, நல்ல வேளை நாம் தப்பித்தோம், தன்னைத்தானே தேற்றிக்கொண்டு “இதுவும் கடந்து போகும்” என்று நினைத்து கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-Mar-23, 12:34 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 148

மேலே