அதுவன்றோ மச்சேற்றி ஏணி களைவு - பழமொழி நானூறு 291

இன்னிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு, ‘ப்’ ‘ற்’ வல்லின எதுகை)

எ’ய்’ப்புழி வைப்பாம் எனப்போற்றப் பட்டவர்
உற்றுழி ஒன்றுக் குதவலர் பைத்தொடீஇ
அச்சிடை யிட்டுத் திரியின் அதுவன்றோ
மச்சேற்றி ஏணி களைவு. 291

- பழமொழி நானூறு

பொருளுரை:

பசுமையான பொன் வளையலை உடையாய்! தளர்வு வந்த இடத்து வைத்த பெருநிதியை ஒப்ப உதவி செய்வர் எனக் கருதி நம்மால் விரும்பி நட்புக் கொள்ளப்பட்டவர் நமக்கு ஓர் இடையூறு வந்துற்ற விடத்து ஒரு சிறிதும் உதவிசெய்யாதவராகி அச்சம் காரணமாக மறுத்தொழுகின் அச் செய்கை ஒருவனை மச்சின்மீது ஏற்றி ஏணி நீக்குதலை யொக்கும் அல்லவா!

கருத்து:

தம்மையே அடைக்கலமாக நினைத்து அடைந்தவர் ஒரு தீதுற்றால் தமக்கு இறுதி பயப்பினும் அவர்க்கு முன்னின்று உதவுதல் வேண்டும்.

விளக்கம்:

இவரே நம்முடைய துன்பத்தை நீக்குவார் என்று வேறு சாதனங்களைத் தேடாது நம்பி இருத்தலின், அவர்க்கு உதவி செய்தல் அறிவுடையோர் கடமையாகும்.

'மச்சேற்றி ஏணி களைவு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Mar-23, 12:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே