கலிப்பாவின் இனம்

33. அடிவரை யின்றி யளவொத்து மந்தடி நீண்டிசைப்பிற்
கடிதலில் லாக்கலித் தாழிசை யாகுங் கலித்துறையே
நெடிலடி நான்கா நிகழ்வது நேரடி யீரிரண்டாய்
விடினது வாகும் விருத்தந் திருத்தக மெல்லியலே.

மேலேயுள்ள பாடல் கட்டளைக் கலித்துறை ஆகும்.

இ - கை. கலித்தாழிசையும் கலித்துறையும் கலிவிருத்தமும் ஆமாறுணர்த்திற்று.

'அடிவரை யின்றி யளவொத்தும் அந்தடி நீண்டிசைப்பிற் கடிதலில்லாக் கலித்தாழிசையாகும்'
எ - து - இரண்டடி முதலாய்ப் பலவடியானும் வந்து ஈற்றடி மிக்கு ஏனையடி தம்முள் அளவொத்தும் ஒவ்வாதும் வருமெனின் அது கலித்தாழிசை எனப்படும் எ - து.

[அளவொத்தும் என்ற உம்மையால் ஈற்றடி மிக்கு அல்லாத வடி அளவொத்தும் ஒவ்வாதும் வரப்பெறுமெனக் கொள்க,]

'கடித லில்லாக் கலித்தாழிசை' என்று சிறப்பித்தவதனால் அவை ஒருபொருண்மேல் மூன்றடுக்கி வருவது சிறப்புடைத்துத் தனியே வரப்பெறுமாயினும் எனக் கொள்க.

வரலாறு

(1) கொய்தினை காத்துங் குளவி யடுக்கத்தெம்
1பொய்தற் சிறுகுடி வாரனீ யைய நலம்வேண்டில்'

'ஆய்தினை காத்து மருவி யடுக்கத்தெம்
மாசில் சிறுகுடி வாரனீ யைய நலம்வேண்டில்'

'மென்றினை காத்து மிகுபூங் 2கமழ்சாரற்
3குன்றச் சிறுகுடி வாரனீ யைய நலம்வேண்டில்.'

இவை இரண்டடியாய் ஈற்றடி மிக்கு ஒரு பொருண் மேல் மூன்றடுக்கி வந்தமையாற் கலித்தாழிசை.

(1) காத்தும் - காப்போம். குளவி அடுக்கத்து - காட்டு மல்லிகையையுடைய
மலைச்சாரலில் வாரல் - வாராதே. இது தோழி கூற்று.

(பி - ம்.) 1. பொய்தீர். 2. கமழ்சோலைக். 3. குன்றிற்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Mar-23, 9:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே