மரணமும்வேடிக்கை மனிதர்களும்

மரணமும்....வேடிக்கை மனிதர்களும்.
-----------------------------

" ஐயோ....என்னை இப்படி தனியாய் தவிக்க விட்டுட்டு போயிட்டாரே. இனி என்ன செய்வேன்? குழந்தைகளை எப்படி கரையேத்துவேன்? இந்த கடவுளுக்கு கண்ணே இல்லையா? எத்தனை தடவை கோயில் கோயிலாய் சுத்தி இருப்பேன். எத்தனை விரதங்கள் இருந்திருப்பேன். ஒரு கடவுளும் கை கொடுக்கவில்லையே...இப்படி நட்டாத்தில் விட்டுடிச்சே ...ஐயோ ஐயோ ...என்னால தாங்க முடியலையே...மயக்கமா வருதே..."
"அம்மா கொஞ்சமாச்சும் காபி குடிங்கம்மா. ராத்திரியில இருந்து பச்ச தண்ணிகூட குடிக்கல. ஒடம்பு என்னத்துக்கு ஆகும்? கொஞ்சம் குடிங்கம்மா...வாயெல்லாம் எப்படி உலர்ந்து போயிருக்கு பார்."
" எனக்கு ஒன்னும் வேணாம். நேத்து இந்நேரம் பேசி சிரிச்சிகிட்டு இருந்தாரே. தோ..பசங்ககூட சேர்ந்துக்கிட்டு என்னை கலாச்சிக்கிட்டு இருந்தாரே.எப்ப பார் என்ன நோண்டலைனா அவருக்கு தூக்கமே வராது. இப்ப பார் ஒண்ணுமே பேசாம தூங்கிட்டு இருக்காரு பாருங்க. யாராச்சும் அவரை கொஞ்சம் எழுப்புங்களேன். இனிமே நான் என்ன செய்யப்போறேன்னு தெரியலையே. இப்படி என்னை தவியாய் தவிக்கவிட்டுட்டு துங்கறதைப்பார் துங்கறதை.."
" அம்மா மனச ரொம்ப அலட்டிக்காதீங்கம்மா... எல்லாரும் ஒருநாள் போகத்தானே போகிறோம். யார்தான் இங்க பர்மனெண்டா இருக்கப் போறோம். நீங்களே இப்படி மனசு ஒடிஞ்சி போயிட்டேங்கன்னா பசங்கள யார் தேத்தறது? பாருங்க அவங்க ரெண்டு பேரும் மெரண்டுபோய் ஒன்னும் புரியாம பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு இருக்குது பாருங்க.அவங்க மொகத்துக்காவது கொஞ்சம் இந்த காப்பிய குடிமா"
"ச்சே...ரொம்ப நல்ல மனுஷன்ப்பா...அதிர்ந்து கூட பேசமாட்டார். அவர் வரதும் போறதும் ஏன் இருக்கறது கூட தெரியாது. அவருக்குப்போய்.அதுவும் இவ்வளவு சீக்கிரத்தில்....ரொம்ப கஷ்டமா இருக்குது..."
" ஆமாம்ப்பா. மனசு ஆறவே மாட்டேங்குது. இவ்வளவு நல்ல மனுஷனுக்கே இப்படின்னா நமக்கெல்லாம் எப்படி வரப்போகுதோ...அப்பா ஆண்டவா எனக்கு நல்ல சாவை கொடுப்பா. படுத்தா போயிடனும்.யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுத்திடாம கஷ்டப்படாம போயிடனும்."
" டேய்...டேய்...இப்படி ஏண்டா நடிக்கிறீங்க. உங்களைப்பத்தி எனக்குத்தெரியாதா? உங்க பவுஷ புட்டு புட்டு வக்கிட்டுமா? ஒவ்வொரு சாவுக்கு வரும்போதும் வார்த்த மாறாம இதைத்தானே பேசறீங்க. போய் மனசாட்சிக்கு பயந்து வாழுங்கடா... போனவன் போயிட்டான். உசுரோட இருக்கிறது நீங்கதான். செத்தவனை போஸ்ட்மார்ட்டம் பண்ணாம...வாழப்போற கொஞ்ச நாளாவது ஒழுக்கமா வாழுங்கடா..." குடித்துவிட்டு உச்ச ஸ்தாதியில் ஒருவன் உளறிக்கொண்டிருந்தான். இல்லை இல்லை தத்துவமாய் கொட்டிக்கொண்டிருந்தான்..
" ஐயோ அண்ணி ...அண்ணன் இப்படி அநாதை ஆக்கிட்டு போயிட்டாரே. இனிமே நீங்க என்னஅண்ணி செய்ய போறீங்க? அண்ணன் ஏதாவது சொத்துகித்து செத்து வெச்சிருந்தாரா? நெலம் கிலம் வாங்கிப்போட்டு இருந்தாரா? எப்படி அண்ணி இந்த பொடுசுங்கள கரை ஏத்த போறீங்க?...."
இத்தனை நாள் வீம்பா...முறிக்கிக்கிட்டு மூஞ்ச தூக்கி வெச்சிக்கிட்டு இருந்த தங்கச்சி மூக்க சிந்திக்கிட்டு ஒப்பாரி வெச்சி கத்திக்கிட்டு இருந்தாள்.
" அக்கா..அக்கா...பாட கட்டணும்...தேர் செலவு..சாவு மணி..சங்கு...பண்டாரம்..எல்லாத்துக்கும் பணம் தரணும். வெட்டியானுக்கு சொல்லி குழி வெட்ட சொல்லணும். அப்புறம் வரவங்களுக்கெல்லாம் காப்பி...டீ போடணும். குழிக்குப் போயிட்டு வந்த பின்னால சாப்பாட்டுக்கு அரேஞ் பண்ணனும். அதனால மொத்தமா கொஞ்சம் பணம் கொடு அக்கா... எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் பைசா சுத்தமா கணக்க ஒப்படைச்சிடறேன்....." கூட பொறந்த பொறப்பு பாசமா கேட்டிக்கிட்டிருந்தது. " தோ பார்யா..அக்கா பாசம்..ஆட்டுக்குட்டி பாசம்னு பணத்தை எடுத்து எடுத்து நீட்டன சாவு வீடுன்னு கூட பாக்கமாட்டேன். ருத்ர தாண்டவம் ஆடிடுவேன். ஜாக்கிரதை. நானும் பாத்திகிட்டேதான் இருப்பேன்." என்று அவன் சக பத்தினி கைய கிள்ளி எச்சரித்ததை வார்த்தை மாறாம ஒவ்வொண்ணா நிறைவேத்துக்கிட்டிருந்தான் பாசமிகு உடன்பிறப்பு.
" உனக்கு விஷயம் ஏதாவது தெரியுமா? செத்துப் போயிட்டானே..இவனோட இன்னுரு மொகம் உனக்கு தெரியுமா? ஒன்னும் தெரியாத அப்பிராணி மாதிரி இருப்பான். சரியான கஞ்சன். ஒரு பைசா அவன்கிட்ட இருந்து கறந்திட முடியாது. சரியான செல்பிஸ் கொரங்கு. இந்த பூனையும் பால்குடிக்குமான்னு இருப்பான். கஞ்சப்பிசினாரி..... கஞ்சப்பிசினாரி. இருக்கறவரை அவனும் சந்தோஷமா இருந்ததில்லை...மத்தவங்களையும் சந்தோஷமா வச்சிக்கிட்டதில்ல.."
" சரி..சரி..இப்ப இதெல்லாம் பேசி..அட அவனை இன்னும் குழிக்குள்ள கூட ஏறக்கல..அதுக்குள்ளே இப்படி பேசறியே..செத்தவனப் பத்தி இப்படியெல்லாம் பேசக்கூடாது. நாளைக்கு நாம செத்ததுக்கப்புறம் நம்மள பத்தி இப்படித்தானே பேசுவாங்க...ஞாபகம் வெச்சிக்கோ. கொஞ்சம் அடக்கி வாசி..நீ பேசறது அவங்க காதுல விழுந்துடப் போகுது."
அதோ அங்கே...கப்பல் கவிழ்ந்ததுபோல.... தல மேல இடி இறங்கினது போல..... தனியே ஒடுங்கிப்போய் ஒக்காந்துட்டு இருக்கே ஒரு உருவம்...அவன் மனசுல அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததேன்னு ப்ளாக் அண்ட் வொயிட்ல...... ஸ்லோ மோஷன்ல....பள்ளி நாட்கள்...கல்லூரி நாட்கள்... எல்லாம் வரிசை கட்டிக்கிட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. கண்கள் ஈரமாயிருந்தாலும் கண்ணீர் சிந்தாமல் குளமாய் தேங்கி...விழி ஓரத்தில் ததும்பி கொண்டிருந்தது. யாரோடும் பேசாமல் பித்து பிடித்து வெறுமையாய் வெறித்து பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். சுற்றி நடப்பவைகளெல்லாம் மியூட்டில் ஓடும் நிழற்படமாய் மனதில் பதியாமல் ஒட்டியும் ஒட்டாமலும்....அவன்தான் இறந்தவனின் ஆருயிர் நண்பன்.
பூத உடலை குளிப்பாட்டினார்கள். சாங்கியம் என்கின்ற பெயரில் ஒரு பெண்ணுக்கு உச்சக்கட்ட கொடுமைகளை நிறைவேற்றினார்கள். அலங்காரம்செய்து..பூச்சூடி..பொட்டிட்டு...வெளியிட்டு. பிணத்தின் கூடவே குளிப்பாட்டி..பூவை கசக்கி...தலையிலிருந்து வெடுக்கென பிடுங்கி...பொட்டை அழித்து....இரண்டு கைகளையும் மோதி கண்ணாடி வளையல்களை சுக்கு நூறாய் உடைத்து... தாலியை அறுத்து பிணத்தின் கையில் கொடுத்து.. அவன் கட்டிய தாலியை அவன் கையிலேயே நேர்மையாய்...தெய்வாதீனமாய்....வாக்குதவறாமல் ஒப்படைக்கிறார்களாம்... பேக்ரவுண்ட் ம்யூசிக்காய் குலவையும்...ஒப்பாரியும்.. அடிவயிற்றையே கலக்கி ஒருவழிபண்ணி கொண்டிருந்தது. என்ன சாங்கியமோ.... ஸம்ப்ரதாயமோ தெரியல.. ஒன்று மட்டும் நிச்சயம் வாழ்ந்த போதும் கொடுமை... இறந்தபோதும் கொடுமைகள் பெண்களுக்கே...
வீடு வரை உறவு...வீதி வரை மனைவி ...காடுவரை பிள்ளை....கடைசிவரை யாரோ... இதோ சுடுகாடு வந்துவிட்டது... இதுவரை அழகாய் பூக்களால் பூத்து குலுங்கிய அந்த பூந்தேர் தலை மீதும் தோள் மீதும் தூக்கி கொண்டாடப்பட்ட அதே தேர் இப்போது பொலிவிழந்து ... பூக்களெல்லாம் உருவி வெறும் நாராய்...மூங்கிலெல்லாம் ஒடிக்கப்பட்டு...காலால் உதைபட்டு சீண்ட ஒருவரும் இல்லாமல் உதாசீனப்பட்டு ஒரு ஓரத்தில் தள்ளப்பட்டு கிடக்கிறது. இது கூட ஒரு தத்துவத்தை நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. நீ ஆரோக்கியமாய்...காசு பணத்தோடு இருக்கும்வரை உன்னை பல்லக்காய்... தேராய்... தலையில் வைத்து...தோளில் தூக்கி கொண்டாடும் இந்த உலகம் உயிர் துறந்தாலோ...இல்லை வருமானம் குறைந்தாலோ.. உன்னை காலில் மிதித்து ஒரு முலையில் வீசிவிடும் ஜாக்கிரதை என்று எச்சரிக்கை செய்கிறது...அது மட்டுமல்ல இந்த இறுதிப்பயணம் தொடங்கும்போது மலர்ந்து அழகாய் தேரில் கம்பீரமாய் வீற்றிருந்த மலர்கள் ...பயணம் தொடர தொடர....எல்லா மலர்களையும் உருவி வீதியில் வீசப்பட்டு...எல்லோருடைய கால்களிலும்..ஓடும் வாகனங்களின் காற்சக்கரங்களால் நசுக்கப்பட்டு ...மணமிழந்து...பொலிவிழந்து உருக்குலைந்து வீதியில் குப்பையாய்...பயணத்தூரம் கொஞ்சம்தான்...ஆனால் அதில் நடந்தேறிய அவலங்கள் அறிவுறுத்தும் தத்துவம் நான்கு வேதத்தாலும் சொல்ல முடியாதது. வாழ்க்கை தத்துவமும் அதுதான். உதிரப்போகும் வாழ்க்கை...வாழப்போவதோ அற்ப நாட்கள்..இறந்தபின் சல்லிக்காசுக்கு விலைபோகாது..அதற்குள் எத்தனை நாடகம்...எத்தனை நடிப்பு...எத்தனை வேஷம்... இத்தனை எதார்த்தங்களும் அங்கு கூடியிருந்த ஒவ்வொருவர் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது.
கடைசியாய் வந்து மொகத்தை பாத்துக்கோங்க. மொகத்தை மூடப்போறேன். பாத்துட்டு வாய்க்கரிசி போடுங்க. இதுதான் கடைசி கடைசியாய் நீங்க செய்யப் போறது. தாராளமாய் காசை போடுங்க. வாங்கய்யா...வாங்க...அந்த கடைசி நேரத்திலும் காசு பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன்.
" ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க...சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க..
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க...நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க...
ஜனனமும் பூமியில் புதியது இல்லை...மரணத்தைப்போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை...இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய கண்களும் எங்கே?...பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?... தீ உண்டதென்றது சாம்பலும் எங்கே?
கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக...மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதைகொண்ட உருவங்கள் போக... எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை..இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை...மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.
கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை...தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை..
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்...மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன?
மரணத்தினால் சில கோபங்கள் தீரும். மரணத்தினால் சில சாபங்கள் தீரும்.
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்...விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்.
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்...யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்...யாத்திரை என்பது தொடர்கதையாகும்..."
கணீரென்ற பண்டாரத்தின் வெண்கல குரலில் இந்த பாடல் அங்கிருந்த ஒவ்வொருவரின் செவி நுழைந்து எலும்பையெல்லாம் சில்லென்று ஏதோ செய்தது. ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளே நிலையற்ற தீர்மானங்களை அந்த பொழுதில் உறுதியாக எடுத்துக்கொண்டனர். மாண்டவனும் அவன் கிடந்த சுடுகாடும் மௌன சாட்சியாய் பார்த்துக் கொண்டும், தங்களுக்குள் புன்னகைத்து கொண்டிருந்ததுதான் எதார்த்தமான உண்மை.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (23-Mar-23, 9:11 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 177

மேலே