தீர்ப்பு எப்படி வரும்

தீர்ப்பு எப்படி வரும்?

இந்த கதைக்குள் போவதற்கு முன்பு என்னை பற்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் ஓரளவுக்கு பொருளாதார பின்புலமும், சமூக அந்தஸ்திலும் உள்ளவன். வாழ்க்கையில் எல்லாமே கிடைக்கும்போது கல்வி எதற்கு? அதை ஒரு கட்டத்தில் தூக்கி எறிந்து விட்டேன்.
எல்லாவற்றிலும் எனக்கு தேவையானவைகள் கிடைத்தாலும், என்னை விட ஒருவனும் இல்லை என்று நினைத்து கொண்டாலும் அவ்வப்போது நான் இவனைப்போல இருக்க வேண்டும் என்று நினைத்து முடியாமல் போன ஒருவன் இருக்கிறான் அவன் சகாயராஜ்.
அவன் இவன் என்று சொல்வதால் மரியாதைக்குறைவாக நினைத்து கொள்ள தேவை இல்லை. என்னுடன் ஒன்றாக பள்ளியில் படித்தவன். நான் பொருளாதார நிலையில் வளமையாக இருந்ததால் படிப்பு போதும் என்று ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டு ‘பிசினஸ்’ பார்த்து கொள் என்று பெற்றோர்கள் இழுத்து விட்டனர்.
படிக்கும் காலத்திலேயே ஆச்சர்யமானவனாக இருந்தான் சகாயராஜ். எதிலும் நிதானம் யோசித்து செயல்படும் போக்கு, அப்பப்பா..!
இன்று நான் ஐம்பது வயதை தொட்டுகொண்டு நின்றாலும் அவனை நினைக்கும் போது இன்னும் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். இதற்கும் அவனை எப்பொழுதேனும் நகர சந்தடி பரபரப்பில்தான் பார்ப்பேன் அதுவும் நான் விலையுயர்ந்த காரினுள் உட்கார்ந்து பயணிக்கும்போது எங்காவது ஒரு இடத்தில் அவன் நின்று கொண்டிருப்பதை பார்ப்பேன். தோற்றத்தில் மாற்றம் வந்திருந்தது. என்றாலும் களையாகத்தான் இருக்கிறான்.
அவனிடம் பேசவோ அல்லது அவனை என் காரில் ஏற்றி செல்லவோ எனக்கு தோன்றியதே இல்லை. அப்படி நினைத்தாலும் அந்த வாகனங்களின் போக்குவரத்து சிக்கலில் முடியவும் முடியாது. அவனை பார்க்கும்போது மட்டும் பழைய நினைவுகள் வருவதுண்டு.
நாங்கள் பதினெட்டை தொட்டு கொண்டிருக்கும் பருவம் அப்போது. வகுப்பில் இவன் மட்டுமே தனிமை படுத்தப்பட்டு இருப்பான். அதற்கு காரணம் நான். என்னிடம் இருக்கும் வசதிகள் செய்யும் செலவுகள், இதனால் எப்பொழுதும் என்னை சுற்றி நண்பர்கள், நண்பிகள். இவன் சைக்கிளில் வந்து கொண்டிருப்பான். அவன் அப்பா எதோ ஒரு தனியார் நிறுவனத்தில் எழுத்தராக இருப்பதாக கேள்விப்பட்டிருந்தேன்.
ஒவ்வொரு முறையும் பள்ளி கட்டணத்தொகை தாமதத்திற்கு காரணம் கேட்டு தலைமையாசிரியர் அறையில் இருந்து அழைப்பு வரும். வகுப்பே அவனை வேடிக்கை பார்த்தாலும் எந்த விதமான பதட்டமுமில்லாமல் அவரது அறைக்கு சென்று வந்து கொண்டிருந்ததையும் பார்த்து கொண்டிருந்தேன். என்னிடம் ஏதாவது ஒரு உதவி கேட்பான் என்று எதிர்பர்த்து இருப்பேன். அவனிடம் பேசிக்கொண்டிருக்கும் பலர் என்னிடம் வந்து பண உதவியோ அல்லது வேறு வகையிலோ உதவிகளை பெற்று சென்றிருக்கிறார்கள். இவன் என்னை கண்டு கொண்டதாகவே காட்டி கொள்ள மாட்டான்.
இவன் மீது ஆத்திரப்பட்டதுண்டு, வேண்டுமென்றே அவனை தனிமைப்படுத்தி அவனை சுற்றி உள்ளவர்களை என் பக்கம் இழுத்துக்கொள்வேன். அவனை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்று மனதுக்குள் ஆசைப்பட்டதுண்டு.
சர்..கார் நிற்கவும் பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்தேன். அதற்குள் டிரைவர் காரை நிறுத்தி விட்டு என் பக்கம் வந்து கதவை திறக்க நான் காரை விட்டு இறங்கினேன்.
ஒரு நாள்.! வகுப்பில் ஒரு மாணவி வகுப்பிற்கு வரவில்லை என்று வீட்டில் விசாரிக்க கிடைத்த தகவல் அதிர்ச்சியாக இருந்தது. அவள் முதல் நாள் இரவில் வீட்டை விட்டு எங்கோ சென்று விட்டதாக செய்தி வந்தது. அன்று வகுப்பில் இவனும் வரவில்லை. நான் கூட அன்று செல்லவில்லை, என்றாலும் மறு நாள் வகுப்பிற்கு வந்த பொழுது சொன்னார்கள்.
அன்றும் இவன் வரவில்லை, நான் நண்பர்களிடம் மெல்ல அவனையும் அந்த பெண்ணையும் இணைத்து செய்தியை கசிய விட்டேன். அதுதான் என்னிடம் பொருளாதர பலம் இருக்கிறதே. இரண்டு மூன்று நண்பர்களுக்கு சின்ன விருந்து கொடுத்து இந்த செய்தியை சொன்னேன்.
அவ்வளவுதான், அவன் பெயர் அந்த பள்ளி முழுவதும் பரவி இவனா? இவனா? என்னும் கேள்வி எழும்பி விட்டது. அன்று தான் நான் நிம்மதியாக இருந்திருப்பேன் என்று உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.
ஆனால் நான் சும்மாவேனும் அவனை பற்றி சொல்லி வைத்தது உண்மையானது போல, அவனே அந்த பெண்ணை வீட்டுக்கு கூட்டி வந்திருக்கிறான். அந்த வீட்டார் அவனை அடித்து உதைத்து அதன் பின் என்ன நடந்ததோ தெரியவில்லை. ஒரு வாரம் கடந்திருக்கலாம், அவன் பள்ளிக்கு வந்த போது பள்ளியில் அனுமதிக்கவேயில்லை.
யார் யாரையோ பார்த்து பேசி அதன் பின்னால் அவன் பள்ளிக்கு வந்தான். அதை விட வேடிக்கையான விசயம் கேள்விப்பட்டேன், நான் பள்ளியை விட்டு விலகிய பின்னால், அந்த பெண் கூட பள்ளிக்கு வந்து கொண்டிருந்தாளாம்.
அவன் வந்து ஐந்தாறு மாதங்கள் மட்டுமே நான் பள்ளிக்கு சென்றேன். அதன் பின் பெற்றோர் வியாபாரத்தை பாரு என்று சொல்லவும், அதை காரணம் காட்டி நானாகவே பள்ளிக்கு செல்வதிலிருந்து கழண்டு கொண்டேன். அதன் பின் என்ன நடந்ததோ?
இத்தனை வருடங்கள் ஓடிய பின்னாலும் அவனை அவ்வப்பொழுது எங்காவது பார்த்தால் இவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? என்று நினைக்க தோன்றும். ஆள் வளமையாகத்தான் தோற்றமளிக்கிறான். ஆனாலும் என்னை போல பணக்கார களை இல்லை.
அன்று காலை மெதுவாகத்தான் எழுந்தேன். களைப்பாக இருந்தது, நேற்று கொஞ்சம் அதிகமாகத்தான் குடித்து விட்டேன். இருக்காதா பின்னே? கிட்டத்தட்ட இரண்டு கோடி அளவில் வியாபாரம் பேசி பணம் கை மாறி இருந்தது. அதற்காக ஒரு “விருந்து” ஏற்பாடு செய்திருந்தேன். இதற்கு உதவி செய்த அரசு அதிகாரிகள் முதற்கொண்டு எல்லோரையும் வர சொல்லி நகரிலேயே பெரிய ஹோட்டலில் வைத்து கொண்டாடி தீர்த்தோம். அதன் களைப்பு விடிந்த பின்னால்தான் தெரிகிறது.
பாத்ரூமில் இருந்தபோது வெளிப்புறமாய் கதவு தட்டப்பட்டது, சீக்கிரம் வாங்க மனைவியின் குரல் கேட்டவுடன் கோபம் தலைக்கேறியது, அவசரமாய் கதவை திறந்து வெளியில் நின்றிருந்த மனைவியை திட்ட வாயை திறந்தவன் அவள் முகம் இருந்த போக்கை கண்டு பதட்டமாகி என்ன? என்ன? எதுக்கு கூப்பிட்ட?
கீழே யார் யாரோ வந்திருக்காங்க, யாரையும் வெளியே போக வேணாம்னுட்டாங்க, காம்பவுண்டுகிட்ட போலீசா நிக்குது, பதட்டமாய் சொல்லிக்கொண்டே இருந்தாள்.
மனதுக்குள் திக்கென்று இருந்தது, யாராய் இருக்கும்? எதுக்கு போலீஸ்? அவசர அவசரமாய் உடைகளை மாற்றி மாடியில் இருந்து கீழே இறங்கினேன். எதிரில் பளிச்சென்று உடையணிந்த ஐவர் நின்று கொண்டிருந்தனர். நடுவில் இருந்த பெண்ணுக்கு என் வயது இருக்கலாம், அவள்தான் இந்த கூட்டத்துக்கு தலைமையோ?
மிஸ்டர் தேவசகாயம், நாங்க “இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டுல” இருந்து வந்திருக்கோம், இப்ப உங்க வீட்டை சோதனை போட வந்திருக்கோம், அதனால தயவு செய்து எங்களுக்கு ஒத்துழையுங்க .இப்ப இந்த நேரத்துல இருந்து உங்க வீட்டுல இருந்தோ அல்லது வெளியில இருந்து யாரும் வெளியே போக வேண்டாம். உங்க செல்போன் எல்லாத்தையும் இங்க முன்னாடி கொண்டு வந்து வச்சிடுங்க.
அந்த பெண் மள மளமளவென என்னிடம் பேசிக்கொண்டே கூட வந்தவர்களுக்கு ஏதேதோ ஆணைகளை இட்டபடியே இருந்தாள். என் இரத்த ஓட்டமே நின்றது போல் எதுவும் பேச தோணாமல் “தொப்பென” அப்படியே சோபாவில் உட்கார்ந்து விட்டேன்.
இரவு பனிரெண்டு மணி வரை என்னையும் குடும்பத்தாரையும் அப்படியே வைத்திருந்தார்கள். எல்லா பொருட்களையும் என் முன்னால் வைத்து ஒருவர் எழுத எழுத என்னிடம் இது உங்களுதானா? உறுதிப்படுத்தியபடியே இருந்தார்கள்.
இவ்வளவு நெருக்கடியிலும் எனக்கு தலைவி போல இருந்த பெண்ணை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்னும் எண்ணம் வந்து கொண்டே இருந்தது. திடீரென அடையாளம் கண்டு பிடித்து விட்டேன், “ வகுப்பில் ஓடிப்போனதாய்” சொல்லி வகுப்புக்கு வராமல் இருந்த பெண் அல்லவா? அப்படியானால்…அவளா இன்று அதிகாரியாய் என் முன்னால்..!
கணக்கில் வராத எல்லாவற்றையும் அவர்கள் எடுத்து சென்ற பின் ஒரு சில நாட்கள் கழித்து
வருமான வரி சம்பந்தமான கோர்ட்டில் உட்காரவைக்கப்பட்டிருந்தேன். செல்வாக்கு, வசதி, எல்லாம் அந்த நேரத்தில் அழுத்தி வைக்கப்பட்டு, “ஜட்ஜ்” வந்தவுடனே உங்க கேசுதான் பர்ஸ்ட்” வக்கீல் வந்து வந்து என் காதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஜட்ஜ் வர்றாரு, ஜட்ஜ் வர்றாரு, நீதிமன்றம் பரபரப்பாகியது முன் வரிசை பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டிருந்த நான் உள்ளிருந்து வந்து உட்கார்ந்த நீதிபதியை பார்த்ததும் அப்படியே மயக்க நிலைக்கு சென்றேன். அங்கு சகாயராஜ் உட்கார்ந்திருந்தான். அப்படியானால்…! அவன்தான் எனக்கு தீர்ப்பு சொல்ல போகிறவனா?
‘வாய்தா’ வாங்கி காருக்கு வந்த பின்னாலும் என் மனம் எதையோ இழந்தது போலவே இருந்தது. வாழ்க்கையில் தோற்று விட்டது போல இருந்தது. சகாயராஜ் தீர்ப்பு சொல்ல போகிறவன். இன்றைய என்னுடைய கேசுக்காகவா.. அல்ல..!
அன்று அந்த பெண்ணை நான்தான் பணத்தாலும், பேச்சாலும் மயக்கி கூட்டி செல்ல இரவு கிளம்பி வர ஏற்பாடு செய்திருந்தேன். சத்தியமாக நல்ல எண்ணத்தில் அல்ல. அன்றைய இரவு இவனின் தந்தைக்கு உடல் நிலை சீரியசாகி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கூட்டி சென்று கொண்டிருந்தவன், நடு இரவுக்கு மேல் இந்த பெண் என்னை எதிர்பார்த்து கையில் சூட்கேசுடன் ரோட்டோரம் நின்றிருப்பதை பார்த்து அந்த நிலையிலும் இறங்கி அவளிடம் ஓடி வந்து பேசி, கெஞ்சி கூத்தாடி ஆம்புலன்சிலேயே மருத்துவமனைக்கு கூட்டி சென்று விட்டான். தந்தையை மருத்துவமனையில் ஐசியூவில் சேர்த்து இவளையும் அங்கேயே உட்காரவைத்து, நிறைய அறிவுரைகளை காதில் ஏற்றியிருக்கிறான்.
மறு நாள் காலையில் அவர்கள் வீட்டிற்கு இவன் உறவினர் ஒருவரை அனுப்பி பேச வைத்து அதன் பின் இவனே அதற்கு மறு நாள் கொண்டு போய் விட்டிருக்கிறான். இதனால் விவரம் தெரியாத சிலரால் அடியும் வாங்கி இருக்கிறான்.
நான் இரவு அவளை வரச்சொல்லி இருந்தவன், காரை எடுத்து வரும்போதே அவள் ஆம்புலன்சில் ஏறி போவதை பார்த்து விட்டு சத்தமில்லாமல் வீட்டுக்கு போய் விட்டேன். மறு நாள் தயங்கி அதற்கு மறு நாள் எந்த வம்பும் என் மீது வரவில்லை என்று தெரிந்த பின்னால் ஒன்றும் தெரியாதவனாய் வகுப்புக்கு வந்தவன் அந்த பெண்ணை இவனுடன் இணைத்து கதை கட்டி என்னை தப்புவித்து கொண்டிருந்தேன்.
அவன் எப்படியோ கெஞ்சி கூத்தாடி பள்ளிக்கு வந்த பின்னால், வகுப்பில் நான் அங்கிருந்து விலகும் வரை என்னிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை. ஆனால் இப்பொழுது பல வருடங்கள் கடந்து இவனின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை..!
அதே போல் அந்த பெண், வஞ்சகமாய் பேசி அவளை வர சொன்ன தவறோ என்னவோ? இன்று என்னை குற்றவாளியாக்கி, இவன் நீதிபதியாகி தீர்ப்பு கொடுக்க போகிறான். அன்று நான் செய்த அந்த தவறான செய்கைக்கும் சேர்த்து தீர்ப்பு கொடுப்பானா?
முதன் முதலாக காருக்குள் உட்கார்ந்து வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தவன் போல் வாய் விட்டு அழுதேன்.
கார் ஓட்டுநர் பயந்து விட்டான். எனக்கு அதை பற்றி கவலை இல்லை.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (24-Mar-23, 3:32 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 140

மேலே