மன்னாதிமன்னர்
#மன்னாதிமன்னர்
பாகம் .. இரண்டு
காவலன் இளைஞனை அழைத்து வருகிறான்.
திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி அவையில் அமர்ந்திருக்கும் அனைவரையும் மன்னா, மன்னா என்று கும்பிட்டது போலல்லாமல், நேராக அரியணை மீதமர்ந்திருக்கும் மன்னர் முன்நின்று வணங்குகிறான். மன்னரும் தன்வலது கையை உயர்த்தி வாழ்த்திவிட்டு, உன் பெயர் என்ன சொல் என்றதும், அந்த இளைஞன் ..
மன்னா, என் பெயர் .. பேரானந்தம்.
உன்பேர் ஆனந்தம் தானே.
இல்லை மன்னா. என்பேர் ஆனந்தம் இல்லை. பேரானந்தம் தான்.
பேரானந்தமா. இப்படி ஒரு பெயர் நான் கேள்விப்பட்டதே இல்லையே. மன்னர் அமைச்சரை நோக்கி, அமைச்சரே, இப்படி ஒரு பெயர் நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா, சொல்லுங்கள்.
இல்லை மன்னா.
அவையில் அமர்ந்திருப்பவர்கள் யாராவது இப்படி ஒரு பெயர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா, சொல்லுங்கள் என்றதும், அவையோர் ஏகோபித்த குரலில், இல்லை மன்னா என்றனர்.
மன்னர் அவர்களனைவரையும் பார்த்து, உங்களைப்பற்றி எனக்குத் தெரியாதா என்ன. தெரியும் என்று சொன்னால் எனக்குப் பிடிக்காது, தண்டனை தருவேன் என்றுதானே அப்படி பதிலளித்தீர்கள், என்றதும் ..அவையோர் மீண்டும் ஏகோபித்த குரலில், அப்படி இல்லை மன்னா. உண்மையாகவே இதற்குமுன் பேரானந்தம் என்றபெயர் கொண்டவரைக் கண்டதும் இல்லை. கேட்டதும் இல்லை என்றனர்.
சரி, போகட்டும் என்று கூறி, இளைஞனைப் பார்த்து, நீயொரு சரியான அழுமூஞ்சி போல் இருக்கிறாய். யார் உன்னைப்பார்த்தாலும் அழுமூஞ்சி என்றுதான் சொல்வார்கள். நானும் அதையே தான் சொல்கிறேன். என் அருகில் வா, நன்றாக என் கண்களை உற்றுப்பார். உன் பெயர் என்ன என்று இன்னொரு முறை சொல்லு என்றதும்,
மன்னா, என் பெயர் பேரானந்தம் தான். நானாக இப்பெயர் வைத்துக்கொள்ளவில்லை.
திருமணமாகி பத்தாண்டுகள் கழிந்தபின்னரே நான் பிறந்ததால்
என்பெற்றோர் பேருவகை அடைந்ததாகவும் அதனால் எனக்கு பேரானந்தம் என்றே பெயர் வைத்ததாகவும் சொன்னார்கள்.
ஓகோ, அப்படியா. சரி போகட்டும். நீ என்னை நேரில் பார்க்கவேண்டுமென்று சொன்னாயாமே. என்ன காரணம் சொல்.
மன்னா, நான் மத்யமர் என்ற தளத்தில் புதிதாகச் சேர்ந்திருக்கும் ஒரு உறுப்பினர்.
மன்னர் இளைஞனிடம் நிறுத்து என்று கைகாட்டி சமிஞ்ஞை செய்துவிட்டு அமைச்சரிடம் மத்யமர் என்றொரு தளம் இருக்கிறதா என்ன என்று கேட்க, அமைச்சர் ஆம் என்பது போல் தன் தலையை அசைக்க, மன்னர் இளைஞனை நோக்கி, தொடர்ந்து சொல் என்றதும், இளைஞன் ..
அத்தளத்தில் தங்களுக்குத் தமிழ் மீதும், தமிழ் மரபுக் கவிதைகள் மீதும் பற்று அதிகம் என்றும், உங்கள் முன் வந்து பிழை இன்றிப்பாடும் ஒவ்வொரு வெண்பாவிற்கும் ஒரு பொற்கிழி பரிசளிப்பதாகவும் சொன்னார்கள். தமிழ் மரபுக் கவிதைகள் குறள் வெண்பா, நேரிசை, இன்னிசை வெண்பா ஆகியவற்றில் ஓரளவு பயிற்சி பெற்றிருக்கிறேன். நான் புனைந்திருக்கும் ஒருசில பாக்களை உங்களுக்குப் பாடி, ஒவ்வொரு வெண்பாவிற்கும் ஒரு பொற்கிழி பரிசு பெற்றுவிடவேண்டும் என்ற ஆசையில் வந்திருக்கிறேன், மன்னா .. என்றதும், மன்னருக்கு மட்டுமின்றி ஏனைய அவையோருக்கும் பேரதிர்ச்சி.
மன்னர் பிறர் யாரும் கேளாதபடி, மெல்லிய குரலில், அமைச்சரிடம், என்ன சொல்கிறான் இந்த இளைஞன். நம் கஜானாவில் முத்து, பவளம், பொன், பொருளோடு நவரத்தினங்களும் ஏராளமாக இருக்கிறது என்று நினைத்துவிட்டானா. ஏதோ வெண்பாவாமே, ஏதோ தமிழில் கொஞ்சம் பேசத்தெரியும் என்பதனால் நான் மும்மொழி கற்றவன் என்று நினைத்துவிட்டானா. இல்லை, என் எதிரிகள் என்னை ஒரு மடையனாக்கி என் குடிமக்கள் முன் என்னை நாறடிக்கப்போகிறார்களா. ஒன்றுமே புரியவில்லையே. என்னையும் என் ராஜ்யத்தையும் காத்தருள வேண்டியது, உம் கடமை என்று சொல்லி முடித்ததும், அமைச்சர், இளைஞனிடம்...
.. தொடரும் ..