மன்னாதிமன்னர்

#மன்னாதிமன்னர்

பாகம் .. மூன்று

அமைச்சர் இளைஞனை நோக்கி ..

இளைஞனே, நாட்டின் நிதிநிலை தற்போது சரியில்லை என்று நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், ஒவ்வொரு வெண்பாவிற்கும் ஒவ்வொரு பொற்கிழி கொடுக்க இயலாது.

பிழை ஏதுமின்றி மன்னரைப் போற்றி ஒரே மூச்சில் பத்து வெண்பாக்கள் பாடிவிட்டால் நிச்சயமாக ஒரு பொற்கிழி கிட்டும் உனக்கு. பத்து வெண்பாக்களில் ஏதேனும் ஒரு வெண்பாவில் தளை இருக்கிறது என்று மன்னர் கண்டுபிடித்துவிட்டால், பொற்கிழி கிடைக்கும் வாய்ப்பை நீ இழந்துவிடநேரிடும். எனவே, நன்றாக யோசித்து பதில்சொல் என்றார்.

அமைச்சரின் புத்திசாலித்தனத்தை மனதிற்குள் மெச்சிய, மன்னர், அமைச்சரை நோக்கி, அமைச்சரே, எனக்கு வெண்பா என்றால் என்னவென்றே தெரியாதே. தளை இருக்கிறது என்று மன்னர் கண்டுபிடித்துவிட்டால் என்று வேறு சொல்லுகிறீர். வெண்பாவில் பிழை உள்ளதா, இல்லையா என்பதை நான் எங்ஙனம் அறிவேன். அவையோர் முன்னிலேயில் என்னை அவமானப்படுத்தத் துணிந்துவிட்டீர்போல் தோன்றுகிதே.

இல்லை, மன்னா. வெண்பா மட்டுமல்ல, ஏனைய மரபுக் கவிதைகளில் பிழை இருந்தாலும், அவற்றைச் சுட்டிக் காட்டுவதற்கென்று அவலோகிதம் என்றதொரு மின்பொருள் இருக்கிறது. இந்த இளைஞன் பாடும் பாக்களை அந்த மென்பொருளுக்குள் இட்டால் போதும். தளை தட்டுகிறதென்றால் அதை அவலோகிதம் சுட்டிக்காட்டிவிடும். தாங்களும் அதைக்காரணம் காட்டி, பரிசு கிடையாது என்று தெரிவித்துவிடலாம், மன்னா.

ஓ, அப்படியா சமாசாரம். நல்ல யோசனை. நல்ல யோசனை. அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, இளைஞனை நோக்கி, மன்னர் ..

பேரானந்தா, உனக்கு சம்மதம் தானா, என்றதும் இளைஞன்,

மன்னா, உங்கள் நிபந்தனையை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் .

என்ன ஆனால், ஆவன்னால் எல்லாம் .. எனக்கும், அவையோர்க்கும் நன்கு புரியும்படி கூறு.

மன்னா,நான் சொல்லவந்தது என்னவென்றால் .. மன்னரைப் புகழ்ந்து பத்தென்ன, நூறு வெண்பாக்கள் கூடப்பாடலாம். வெண்பா மட்டுமல்ல. நூறு அந்தாதிகளும் தான் பாடலாம்.

மன்னர் இளைஞனிடம், நிறுத்து என்று சமிஞ்ஞை செய்து, அமைச்சரிடம், மெல்லிய குரலில், ...ஆஓ

அமைச்சரே, என்னைப் புகழ்ந்து பத்தென்ன, நூறு வெண்பாக்கள் கூடப்பாடலாம். வெண்பா மட்டுமல்ல. நூறு அந்தாதிகளும் தான் பாடலாம் என்கிறானே. எனக்கு வெண்பாவே தெரியாது. புதிதாக அந்தாதீ என்று வேறு சொல்கிறான். அந்தாதீ என்றால் என்ன.

மன்னா, அந்தாதீ அல்ல. அந்தாதி. இன்று மாலை தாங்கள் நந்தவனத்தில் வீரநடை பயிலும்போது அந்தாதி என்றால் என்னவென்று கூறுகிறேன் என்றதும், மன்னர் இளைஞனிடம் தொடர்ந்து சொல் என்றார்

.. தொடரும் ..

எழுதியவர் : VENKATACHALAM DHARMARAJAN (26-Mar-23, 9:08 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 45

மேலே