வாழ்வு உன் வசமாகும்

வாழ்வு உன் வசமாகும்

கல்லும் முள்ளும் கலந்தது வாழ்வு
கவலையில் வீழ்ந்தால் ஏற்படும் தாழ்வு
உள்ளத்தில் வேண்டாம் எப்போதும் சோர்வு
உழைப்பு ஒன்றே வறுமைக்குத் தீர்வு

வாழ்வில் உயரும் எண்ணம் வந்தால்
வருகின்ற தடைகள் நடைக்கல் ஆகும்
விதியென்று சொல்லி விரக்தி அடைந்தால்
வீதியில் நிற்கும் நிலை உண்டாகும்

நிமிர்ந்து நிற்கும் மரமது புயலில்
நிலையது குலைந்து வேரோடு சாயும்
வளைந்து கொடுக்கும் நாணல் மீண்டும்
வளைவுகள் நிமிர்ந்து வீழ்ச்சியை வெல்லும்

ஊக்கம் உள்ளத்தில் திரண்டு வந்தாலே
தேக்கமும் தடைகளும் மிரண்டு ஓடும்
சுறுசுறுப் பென்ற மந்திரம் போட்டு
சூழ்ந்திட்ட சோம்பலை தூரத்தில் ஓட்டு

வீறுகொண் டெழுந்து புறப்படு போதும்
வெற்றி என்பது விலகியா போகும்
உறங்கிக் கிடக்கும் நிலையினை விடுத்து
உடன்எழு வாழ்வு உன்வசமாகும்

பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : பாவலர் . பாஸ்கரன் (2-Apr-23, 2:50 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 64

மேலே