நானும் எனது நிறமும் நூல் ஆசிரியர் ஓவியர் புகழேந்தி நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
நானும் எனது நிறமும்
நூல் ஆசிரியர் : ஓவியர் புகழேந்தி
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
தோழமை வெளியீடு, எண் 19/665, 46ஆவது தெரு, 9ஆவது செக்டார், கே.கே நகர், சென்னை-78. பக்கங்கள் : 472 ; விலை : ரூ.350.
*****
உலகப்புகழ் பெற்ற ஓவியர் புகழேந்தி அவர்களின் தன்வரலாறு நூல். புகழ்ச்சிக்காக சொல்லவில்லை, தேசப்பிதா காந்தியடிகளின் சத்தியசோதனை நூல் போலவே உள்ளது. துளி கூட பொய் இல்லை. வர்ணனைகள், இட்டிக்கட்டி என எதுவுமின்றி நடந்ததை நடந்தபடியே எழுதி உள்ளார். நல்ல நடை, தெளிந்த நீரோடை போன்ற நடை. படிக்க ஆர்வம் ஏற்படும் வண்ணம் உள்ள எழுத்து. இதில் எதுவும் பொய் இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
நூலிலிருந்து :
1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் நாள், குழந்தைவேலு – நாகரெத்தினம் இணையருக்கு மகனாகப் பிறந்தேன். நான் பிறந்த செய்தியை, என் தந்தையிடம் கூறியபோது,
வானொலியில், ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ?
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்ல மகனே!
என்ற பாடல் ஒலித்ததாம். “நான் பிறந்த செய்தியும், அந்நேரத்தில் ஒலித்த அந்தப் பாடலின் பொருளும் என் தந்தையை கண்ணீர் விட வைத்ததாக பின்னாளில் என் தந்தை அடிக்கடிக் கூறுவார்”.
நடந்ததை அப்படியே எழுதி உள்ளார் என்பதற்கு பதச்சோறாக இதனை எழுதி உள்ளேன். மூடநம்பிக்கை தான் ; சிலர் அந்தக்காலத்தில் சகுனம் சரியில்லை, நேரம் சரியில்லை என்று அவர் தந்தையை மனம் நோக வைத்து இருப்பார்கள். அந்த மூடநம்பிக்கையை தவிடுபொடியாக்கும் வண்ணம் உலகப்புகழ் ஓவியராக, எழுத்தாளராக, ஆளுமையாக, பகுத்தறிவாளராக உருவெடுத்தார் ஓவியர் புகழேந்தி.
இந்த நூலை அவரது அன்பு மனைவி சாந்திக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். இதிலிருந்தே மனைவி மீதான அன்பை அறிய முடியும். அவரது பிறந்த நாள், மணநாள் வரும்போது மறக்காமல் முகநூலில் வாழ்த்தினைப் பதிந்திடும் பண்பாளர்.
ஓவியங்கள் பலவகை உண்டு. கோட்டோவியத்தால் உலகப்புகழ் பெற்றவர் புகழேந்தி. தந்தை பெரியார் ஓவியத்தை எத்தனையோ பேர் வரைந்துள்ளனர். ஆனால் இவரளவிற்கு எவரும் வரையவில்லை என்றே சொல்ல வேண்டும். இவரது ஓவியங்களில் எனக்கு மிகவும் பிடித்தது பெரியாரின் ஓவியம் தான். எனது கவிதைகளை, முகநூலில், வலைப்பூவில் பதிவிடும் போது இவரது ஓவியங்களை பெருமளவில் பயன்படுத்தி இருக்கிறேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், மாவீரர் பிரபாகரன் – என இப்படிப்பட்ட மிகச்சிறந்த ஆளுமைகலை வரைந்திட்ட ஆளுமையான ஓவியர் புகழேந்தி, என்னுடைய ஓவியத்தையும் மிகச்சிறப்பாக வரைந்து அனுப்பினார். என்னுடைய நூல்களில் அந்த ஓவியத்தைத் தான் பயன்படுத்தி வருகிறேன்.
ஓவியர் புகழேந்தி அவர்களுக்கு நல்ல நினைவாற்றல். குழந்தைப் பருவத்தில் நடந்ததை எல்லாம் மறக்காமல் அப்படியே பதிவு செய்துள்ளார். “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்ற பழமொழிக்கு ஏற்ப பள்ளிப்-பருவத்திலேயே பாடப் புத்தகங்களில் உள்ள படங்களை அப்படியே வரைந்து பழகி இருக்கிறார். சக நண்பர்களுக்கும் வரைந்து கொடுத்துள்ளார்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்த நண்பனிடம் 10 (பத்து) பைசா கொடுத்து கார்பன் வாங்கியதையும் மறக்காமல் பதிவு செய்துள்ளார். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற பொன்மொழிக்கு ஏற்றபடி, சிறுவயதிலிருந்தே வரைந்து-வரைந்து, பின்னாளில் பெரும் ஓவியராக விருட்சமாக வளர்ந்துள்ளார்.
ஓவியர் உசைன் பற்றி இவர் எழுதிய நூலிற்கு, நான் எழுதிய மதிப்புரையில், உங்களின் தன்வரலாறு எழுத வேண்டுமென்று வேண்டுகோள் வைத்திருந்தேன். அதனை மறக்காமல் நினைவில் வைத்திருந்து தன்வரலாறு எழுதியதும் எனக்கும் நூலை அனுப்பி வைத்துவிட்டார். மிக்க நன்றி.
வாழ்வில் சந்தித்த, உதவிய நண்பர்களை எல்லாம் மறக்காமல் பெயர் குறிப்பிட்டு நன்றி பாராட்டி உள்ளார். அக்காலத்தில் எம்.ஜி.ஆர். மீதிருந்த ஈர்ப்பு, தாத்தாவுடன் சென்று வயல் வேலை பார்த்தது – இப்படி ஒன்றுவிடாமல் இளமைப்பருவம் முழுவதையும் ரசனையுடன் ரசித்து சுவையாக எழுதி உள்ளார். ஆசிரியர்கள் பெயர்கள் கூட மறக்காமல் அப்படியே பதிவு செய்துள்ளார்.
முதன்முதலில் அப்பாவுடன் சென்றபோது பேருந்து நிறுத்தத்தில் அப்பாவிற்கு தெரியாமல் சென்று கடைகளில் தேடி வாங்கிய வண்ணத்தைக் கூட மறக்காமல் நூலில் பதிவு செய்துள்ளார். வண்ணங்கள் பல வெளிநாடுகளில் வாங்கும் அளவிற்கு வளர்ந்து விட்ட பிறகும் முதல் வண்ணம் மறக்காதது சிறப்பு. வண்ண ஓவியங்கள் ஒருவகை என்றாலும், அவரது வண்ணம் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்று பாட வேண்டும் போல உள்ளது. கோட்டு ஓவியத்தில் கருப்பு வண்ணத்தில் உருவத்தை கொண்டு வருவது அவ்வளவு எளிதான செயல் அன்று. அரிதான செயலை மிக எளிதாகச் செய்பவர் ஓவியர் புகழேந்தி.
மாணவ பருவத்தில் வரைந்த ஓவியங்களும் நூலில் உள்ளன. சிறப்பு. ஈடு இணையற்றவை. 1985ஆம் ஆண்டு கலைகாட்சிக்கு தேர்வு செய்யப்பட்ட ஓவியம் அது. வெள்ளை சட்டை அணிந்திருப்பது தெரியாதது போலவே வரைந்திருப்பார். மிக நுட்பமான ஓவியம். ஊடகங்களில் இலக்கிய வட்டத்தில் கலந்துகொண்ட நிகழ்வுகள் அப்படியே பதிவு செய்து உள்ளார்.
இந்த நூலை வைத்து ஓவியர் புகழேந்தி வரலாற்றை திரைப்படமாக எடுத்தால் உறுதியாக வெற்றி பெறும். தன்வரலாறு எழுதுங்கள் என்று முந்தைய நூலில் எழுதியது நடந்தது போலவே, திரைப்படமாகவும் வரலாம் என்ற நம்பிக்கை உண்டு. இந்த நூலை இயக்குனர் வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டுகிறேன்.
பிரபல ஓவியராக மட்டுமின்றி போராளியாகவும் வாழ்ந்து உள்ளார். குறிப்பாக ஈழப்படுகொலைக்கு எதிராக தமிழகம் கொதித்து எழுவதற்கு ஓவியர் புகழேந்தி அவர்களின் உணர்ச்சிமிகு ஓவியங்கள் காரணமாக இருந்தன என்றால் மிகையன்று. பழ.நெடுமாறன் ஐயா, இயக்குனர் சேரன், இனமுரசு சத்யராஜ் உள்ளிட்ட பலர், இவரது ஈழப்போராட்ட ஓவியங்களைப் பார்த்துவிட்டு பாராட்டிய படமும் நூலில் உள்ளது.
“தமிழன் என்று சொல்லடா ; தலைநிமிர்ந்து நில்லடா” என்ற நாமக்கல் கவிஞரின் வைர வரிகளுக்கு ஏற்ப தலைநிமிர்ந்து வாழ்ந்துவரும் ஓவியர் புகழேந்தி அவர்களின் தன்வரலாறு நூல் வளரும் இளைய சமுதாயத்தினருக்கு உந்துசக்தி தரும் நூல்.
--
.