கற்றலின் மகிமை
கற்கிற பொழுதொரு கற்சிலை யதுவென
நிற்பது தவறென நிச்சய முணருவ
தற்குள விதியது தக்கவை செயுமென அறிவாயா?
*
கற்றவ ருறவுனை கற்றிட வழிசெய
உற்றவை யறிவது உத்தம மெனநினை
மற்றவ ருறவது மட்டமு முடையது புரிவாயே
*
நற்பய னடைகிற தற்கொரு வழியது
கற்பதி லுளதது கற்றிட வருவது
கற்பனை யெனநினை தற்கிலை நிசமிது தெரியாதா?
*
அற்புத மறிவினை பெற்றிட தவமிரு
கற்றிட வரமது கிட்டிடு மெனநினை
விற்பனை செயவுள தற்குள பொருளிலை அறிவாயே
*
சிற்றுளி அதுபெரு மற்புத சிலைதரு
தற்கடி படுவது எத்தனை வலியென சற்றுண ரதுவுனை மற்றொரு நிலைபெற விடலாமே
*
கற்சிலை யெனவுளி கற்களி லிடுமடி
பற்பல வலிதர வத்தனை வலியொடு
உற்றது பொலிவென மெச்சிடு மதையுண ரதுவாயே
*
வற்றிய நதியென விட்டுனை யகழுவ
தற்குள உறவுக ளிட்டமு மறிவது
குற்றம் மிலையது சற்றதை நினைவது தவறேதோ?
*
கற்றறி கிறவழி கட்குள தடைகளை
முற்றிலு முடையவை முட்களி னுருநமைச்
சுற்றியு முடையவை சட்டென விடுபடு உயர்வாயே!
*
மெய்யன் நடராஜ்