தேளெனக் கொட்டுந் தேயிலை

தேளெனக் கொட்டும் தேயிலை
(இரட்டை மணிமாலை)
=========================
கொட்டும் மழையில் குளிர்தாங்கிக் கண்களை
வெட்டும் இடிமின்னல் வேறுதாங்கி – ஒட்டுத்
துணியுடுத்தி தேயிலைத் தோட்டத்தில் நித்தம்
பணிசெய்தும் முன்னேறார் பார்.(1)
**
பார்ப்பதற் கென்றும் பரிதா முடனுளப் பைங்கிளிகள்
நீர்த்துளி தேக்கி நிறைத்த விழிகளின் நீள்துயரம்
சீர்மிகு ஆற்றில் சிதறி வழிகிற செம்புனலாய்'
ஓர்த்தடை யின்றி உவகை யொடுதினம் ஓடிடுதே!(2)
**
ஓடிடும் வெள்ளம் உறங்கிடா தோடுதல்போல்
வாடிடும் மக்களின் வாட்டமும் – ஓடியே
போய்விடின் வாழ்க்கையில் பூக்காலம் பூண்டதை
வாய்விட்டுப் பாடுவர் வாழ்த்து.(3)
**
வாழ்த்து மழைதனில் வாழ்வை நனைத்திட வானமின்றி
வீழ்ந்து கிடப்பவர் வெற்றிக் கனவுகள் வேர்பிடிக்கச்
சூழ்ந்த வறுமையும் சுட்டுப் பொசுக்கிய சூததனால்
காழ்ப்பு படிந்தவர் காட்சி உயர்ந்திடக் காண்பதெங்கே!(4)
*காழ்ப்பு – தழும்பு
**
எங்கே இவர்கள் எதிர்காலம் மாறிடின்
அங்கே தமக்கான ஆதாயம் – இங்கே
குறைந்திடு மென்றே குடத்துள் விளக்காய்
மறைப்பவர் நெஞ்சமோ மாசு.(5)
**
மாசுளங் கொண்ட மனிதரி னாலே மதியிழந்து
வீசிடுங் காற்றும் விலகியே செல்லும் விதிவசத்தால்
தேசியம் காக்கத் தினசரி கொய்யும் திரவியத்தால்
ஆசிய நாட்டின் அடிமைக லானார் அழுவதற்கே!(6)
**
அழுபவர் வாழ்வின் அடிப்படைத் தேவை
இழுபறி யானதை எண்ணி – எழுகவே
என்றோர் இதழ்களை இங்கே திறந்திவர்க்காய்
முன்சென்ற தாரோ முழங்கு.(7)
**
முழங்கிடும் சங்கொலி முன்பெழுந் தாய்மார் முனங்குகின்ற
குழந்தைகள் உண்பதற் குற்றவை செய்தே கொடுத்துவிட்டு
பழந்துணி யாகியப் பாவாடைக் காக்கப் படங்குகட்டி
கொழுந்தினைக் கொய்திடக் கூடையை தாங்கிக் குமுறுவரே!(😎
*படங்கு - தார்ப்பாய்
*
குமுறிடு வார்தம் கொடுமைகள் மாற்றார்
அமுக்கியே வாசிக்கும் ஆட்கள் - கமுக்கமாய்
ஏய்த்துக் களித்திட ஏமாளிக் கூட்டமாய்
வாய்த்ததென் ரெண்ணிடு வார்!(9)
**
எண்ணுவ தெல்லாம் இயல்புட னோர்நாள் இறைசெயலால்
கண்ணெதிர் வந்தே கரஞ்சேரு மென்றக் கனவுடனே
உண்பதற் கில்லா துருகிடும் போதும் உறுதியொடு
மண்தனில் வேர்வை மழைதனைச் சிந்தும் மலையகமே! (1௦)
*
மலையக மக்கள் மனங்களில் நீங்கா
அலையெனத் துன்பம் அடிக்கும் – தலையினில்
என்றோ தவறாய் எழுதிய வாசகம்
ஒன்றிவரைச் சாய்த்திட்ட ஊறு (11)
*
ஊறுகள் தாங்கி உழைப்பவர் வாழ்வில் உயர்வுமின்றி
நூறுகள் கைக்குள் நுழைவதற் காயே நுணங்கியழும்
ஆறுகள் பாயும் அழகிய நாட்டின் அடிமையென
மாறுத லில்லா மடமைக ளாயே மடிபவரே (12)
*
மடிந்தமுன் னோரின் மதியிழப் பாலே
விடியலை காணா விழுதாய் - இடிந்த
மனத்தோ டுழைத்தும் மறுமலர்ச்சி யில்லா
இனத்தவ ராகின ரிங்கு(13)
*
இங்கிவர் கொய்யும் இளந்தளிர் கொண்டு எழிலுறவே
தங்கிட விட்டுத் தமதுயர் விற்காய் தனித்துவமாய்த்
தொங்கிய வாழ்வைத் தொடக்கிய யாரோ துயர்படிந்து
மங்கிடச் செய்த மறைமுகச் சூழ்ச்சி மலையகமே(14)
*
மலையக மிங்கே மலைபோ லுயரத்
தலையென நின்றத் தமிழர் - கலையுடன்
தேயிலைக் காட்டைத் திரவிய மாக்கியும்
வாயிலா துள்ளார் வறண்டு(15)
*
வறண்டவர் வாழ்வை வனப்புள தாக்க வகையுமின்றி
நிறங்களை மாற்றும் நிகழ்வுள சீவன் நிலையுடுத்து
திறமுடன் ஏய்த்துத் திரிகிற வர்கள் திமிங்கிலத்தின்
பிறப்பென வாகிப் பிழிந்திவர் வாழ்வைப் பிதுக்கினரே(16)
*
பிதுக்கிய வர்கள் பிடுங்கியச் செல்வம்
பதுக்கிய நாட்டின் படிகள் - ஒதுக்கியே
வைத்து உணர்வுகள் வாட்டி மலையகத்தில்
நைத்தன ரன்பாய் நடித்து(17)
*
நடித்தவ ரிங்கே நடைமுறை வாழ்வில் நலம்பெறவும்
படித்தவ ரெல்லாம் பசியுடன் வாழப் பழகிடவும்
குடித்தனம் செய்யக் குறைகளை அள்ளிக் கொடுத்தவரால்
வடித்திடுங் கண்ணீர் வழிவர லாறு வளர்ந்ததுவே(18)
*
வரலாறு காணா வறுமைப் பிடிக்குள்
சிரந்தாழ்ந்த ஏழ்மைச் சிலைகள் - வரமாகக்
கேட்கும் வருமானக் கீதம் வழங்காமல்
வாட்டுமர சாங்க வதைப்பு(19)
*
வதைப்பவர் கொள்கை வதைபடு தற்கோ வழியுமின்றி
விதைப்பவர்க் கென்றே விளைநில மென்றோர் விதியுமின்றி
உதைப்பவர் கால்கள் உருட்டிடும் பந்தாய் உருள்வதையே
முதற்குடி தாங்கும் முதுகுளக் கூடை முனங்கிடுமே! (2௦)
*
முனங்கிட விட்ட முடிவிலா ஏழ்மை
சனங்களை யன்று சரிக்க - இனசனம்
கூடி இலங்கையில் கோப்பியொடு தேயிலையைப்
பாடிப் பயிரிட்டார் பார்(21)
*
பார்த்திடும் திக்கில் பசுமையை வார்க்கும் பயிர்வளர்த்து
ஈர்த்திட விட்ட திங்கிரு நூறு இருள்வருசம்
தீர்த்ததன் பின்னும் தெருவினில் நின்று திசைகளற்று
வேர்த்திடும் மக்கள் விரும்பிய வாழ்க்கை விடியலையே(22)
*
விடியலைத் தேடிய விட்டிலைப் போன்று
மடியும் மலையக மக்கள் - அடிமையின்
வாழ்வை அவரவர் வாழ்வாய் அனுபவிக்கச்
சூழ்நிலை செய்ததே சூது(23)
*
சூதுவா தறியார் சுகப்பட வெண்ணிச் சுகமிழக்கப்
போதுமாய் வறுமை புடைத்திட அற்றைப் பொழுதுகளில்
ஏதுவா யுரைத்த எழில்மொழி கேட்டு இலங்கைவர
தோதுவா யிருந்த தொருவழி தோணித் துறைமுகமே(24)
*
துறைமுகத் தோணி துடிப்புட னேற்ற
முறைதவறி வந்தனர் முன்பு -
மறைமுகச்
சூழ்ச்சி யறியாதே சோதனைக் கண்டவர்
வீழ்ச்சித் தொடங்கிய தங்கு(25)
*
அங்கு தொடங்கிய ஆதியாம் துன்பம் அதைநிறுத்த
இங்கு எவருமே இல்லையே இன்னும் இருட்டடிப்பு
சங்கு ஒலித்திடச் சாப்பிட ஏதோ சமைத்தெடுத்துச்
தொங்கும் படிநிதம் தூக்கிடும் கூடைத் தொடர்கதையே(26)
*
கதையெழுத வாழ்வைக் கருவெனக் காட்டி
வதைபட் டிழந்தார் வனப்பு - அதையிதைச்
சொல்லியே ஆள்வார் சுகம்பெற வாழ்நாளில்
தொல்லைகள் கண்டார் தொடர்ந்து(27)
*
தொடர்ந்திவர் வாழ்க்கைத் தொலைந்திட வேண்டித் துடித்தவர்கள்
அடர்ந்திருந் திட்ட அடவியை மாற்ற அரக்கரென
இடர்பல செய்து இலங்கையில் அன்று இருத்தியதில்
சுடரிழப் புற்ற சுகப்பொழு தஃதைச் சுமந்தனரே(28)
*
சுமையான வாழ்வில் சுகந்தேடும் மக்கள்
இமைசிந்தும் கண்ணீர் எதற்கு? - தமையே
உரமாக்கித் தேயிலை ஓங்கியுயர் தற்கே
வரம்பெற்ற வாழ்வேன் வதை?(29)
*
வதைந்தவர் இங்கே வளம்பெற வேயொரு வாழ்க்கையின்றி
சிதைவது கண்டும் சிறகுகள் தந்திடச் சிந்தையிலார்
பதைபதைப் பூட்டிப் பறித்திடுந் தேயிலைப் பாக்கியத்தைக்
கதைகதை யாக்கும் கலைஞரைத் தேளெனக் கொட்டிடுதே(30)
*
*மெய்யன் நடராஜ்
***

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (24-Apr-23, 2:44 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 55

மேலே