நீத்த பெரியார்க்கே யாயினும் மிக்கவை மேவிற் பரிகாரம் இல் - பழமொழி நானூறு 320

இன்னிசை வெண்பா

காப்பிகந் தோடிக் கழிபெருஞ் செல்வத்தைக்
கோப்பெரியான் கொள்ளக் கொடுத்திரா தென்செய்வர்
நீத்த பெரியார்க்கே யாயினும் மிக்கவை
மேவிற் பரிகாரம் இல். 320

- பழமொழி நானூறு

பொருளுரை:

இருவகைப் பற்றினையும் முற்ற அறுத்த துறவிகளே ஆயினும், தம்மால் தானமாகக் கொடுக்கப்பட்ட மிக்க பொருளைத் தாமே சென்று மேவுவராயின் அதனை இடை நின்று தடுத்தற்குரிய வழி இல்லை.

அதுபோல, காவல் நெறியைக் கடந்து சென்று குடிகளது மிக்க பெருஞ் செல்வத்தை அரசனாகிய பெரியவன் வலிந்து சென்று கொள்வானாயின், குடிகள் கொடுக்காது என் செய்து நீக்கவல்லர்?

கருத்து:

அரசனே குடிமக்களது செல்வத்தைப் பறிக்க முற்படுவானாயின், அதனை நீக்க வல்லவர் யாரும் இலர்.

விளக்கம்:

பிறர்க்குத் தானமாகக் கொடுத்த துறவிகளே அதனை மீண்டும் அடைய முற்படின், இடை நின்று விலக்க இயலாதவாறு போல, அரசனே மக்களது செல்வத்தைப் பறிக்க முற்படின், இடைநின்று நீக்குதல் இயலாத தொன்றாம்.

'மிக்கவை மேவிற் பரிகாரம் இல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Apr-23, 2:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே