யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகி விடும் - பழமொழி நானூறு 321

நேரிசை வெண்பா

தற்றூக்கித் தன்துணையுந் தூக்கிப் பயன்தூக்கி
மற்றவை கொள்வ மதிவல்லார் - அற்றன்றி
யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகி விடும். 321

- பழமொழி நானூறு

பொருளுரை:

தன்னால் இக்காரியங்கள் முடியுமாவென்று முதலில் ஆராய்ந்து தனக்குத் துணை ஆவாரையும் ஆராய்ந்து, செய்தால் உளவாம் பயனையும் ஆராய்ந்து அறிவிற் சிறந்தோர் அவற்றை மேற்கொள்வர்;

அங்ஙனம் ஆராய்தல் இல்லாமல் இயலாத செயல்களுள் யாதானும் ஒன்றை மேற்கொண்டு செய்யும் முறையறியாது ஏதாவது செய்தால் தான் தான் நினைத்ததின்றி அதற்கு மாறாகித் துன்பமே உண்டாகும்.

கருத்து:

எக்காரியத்தையும் ஆராய்ந்தே தொடங்க வேண்டும்.

விளக்கம்:

'யாதானும் ஆகிவிடும்' என்றமையால், தான் நினைத்தது கைகூடாமல் துன்பமே வந்துமுடியும் என்பதாம்.

'யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகிவிடும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Apr-23, 2:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே